இந்தி தெரியாது போடா!

என்றியம்பிட  வழி இல்லை தோழா!

எங்கு காணினும்

‘ஜி’…….. ஒலிக்கிறது

4’ஜி’  5’ஜி’ ஆள மயக்குது

 

மக்கள் மத்திய அரசை நம்பவில்லை

நம்பாமல் மந்திரிகள் பதவியே இல்லை

ஆளும் வருக்கம் ஆடிப் போய்க் கிடக்கிறது

நாளும் வழக்கு கூடிப்போய் மிரட்டுது

 

வயிற்றுப் பிழைப்புக்கு வந்த

வடக்கிந்தியன் வாயிலாக

தென்னிந்தியா முழுதும் தறி கெட்டுத் திரிகிறது இந்தி

 

இந்தி தெரியாது போடா

என்றியம்பிட வழி இல்லை தோழா

 

பணியாற்ற வந்தவனிடம் பண்டம் விற்க

வழக்கு மொழியாய் வளருது இந்தி

வக்கற்ற தமிழனின் நாவினில் வருது முந்தி

 

பெட்டிக்கடையில் குட்டி போடுது

வட்டிக் கடையில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தி

 

இந்தி தெரியாது போடா

என்றியம்பிட வழி இல்லை தோழா

 

சமற்கிருதத்தில் சடங்கு நடக்குது

சந்தேகம் கேளாமல் சன்மானம் கொடுக்குது

 

ஆலயந் தோறும் அருச்சனை நடக்கிறது

அருத்தம் தெரியாமல் ஆண்டவனைத் தொழுகிறது.

 

கூட்டம் போட்டு கூவும்  கூட்டம்

ஆட்டம் முடிந்ததும் ஓட்டம் பிடிக்கிறது

மாற்றம் ஏதுமில்லை மண்டிபோட்டு

மதியை இழந்து மத்தியில் கிடக்கிறது

 

நாற்காலி பதவிக்கு நாலு பேருக்கு முன்னால்

நாட்டாமை பண்ணுவது.

நாலு பேரு கலைஞ்சதும்  நாயைப்போல

வாலாட்டுவது

 

இந்தி தெரியாது போடா

என்றியம்பிட வழி இல்லை தோழா

 

தேர்தல் வருகுது தேடி வருகுது

நாடி உருகுது வாடி வருந்துது

கட்டி தழுவுது கஞ்சி குடிக்குது

கொஞ்சிக் குலாவுது கெஞ்சி கேட்குது

அஞ்சி நடுங்குது அரசாணைங்குது

 

இந்தி தெரியாது போடா

என்றியம்பிட வழியில்லை தோழா

 

தமிழ்நாட்டில் தமிழைத் தவிர வேறு எல்லாம் இருக்குது

புரியாமல் தலை சுற்றித் தமிழ் அகதியா கிடக்குது

 

பொது இடங்களில் பெயர்ப் பலகையில்

பெரிதாய் இந்தி இருக்கிறது

 

ஈட்டும் பணத்திலும் இருக்கிறது இந்தி

எதிர்க்கும் மனிதன் எரிப்பானா பணத்தை

 

கை காட்டும் இடத்தில் எல்லாம்

காட்சியளிக்கிறது இந்தி

கண்ணை மூடி நடப்பானா?

 

இந்தி தெரியாது போடா

என்றியம்பிட வழி இல்லை தோழா

 

திரைகடலோடி திரவியம் தேடியும்

தீரவில்லை பற்றாக்குறை

திரைகடல் ஓடுகையிலும்

தீராமல் இருக்கட்டும் நம் மொழிப்பற்று

 

ஈன்ற மொழி அன்னைக்குச் சமம்

மற்ற மொழிகள் உறவுக்குச் சமம்

உறவுகளைத் தள்ளி வையுங்கள்

உத்தரவுகளுக்குக் கொள்ளி வையுங்கள்

 

திணிக்கும் எதுவும் செரிப்பதில்லை

திணிப்பதால் வெற்றி கிடைப்பதில்லை

இனிக்கும் தேனும் திணிக்கும்போது திகட்டக் கூடும்

குமட்டிக் கொண்டு வாந்தி எடுக்கக்கூடும்

 

இந்தி தெரியாது போடா

என்றியம்பிட வழி இல்லை தோழா

 

தேவை எனும்போது

தேடிக்கொள்ள தெரியும் எங்களுக்கு

தேவையின்றித் திணித்து

மொழியைப் பலியாக்காதே

பலியாகாதே  பழியாகாதே

 

இந்தி தெரியாது போடா

என்றியம்பிட வழியில்லை தோழா

இந்தி வருது முந்தி

தமிழ். சந்தி சிரிக்குது பிந்தி

அந்நிய மொழிகளுக்குச் சமபந்தி

அன்னை மொழி அங்கீகாரம் வேண்டி

விழையுது  சமாபந்தி

இவண் ஆற்காடு க.குமரன் 9789814114