இலக்குவனார்   மறுபதிப்பாய்  இவரைச் சொல்வேன்!

 

இனத்திற்கும்  தமிழினுக்கும்  ஏற்றம் காண

ஈரோட்டார்  பாதையிலே  நாட்டம் கொண்டு

அண்ணாவும்  நாவலரும்   போற்றும் வண்ணம்

எந்நாளும்  கழகத்தின்    வெற்றிக் காக

இரவுபகல் பாராமல்   உழைத்த  நல்லோர்

சுரதாவால்  பாராட்டுப் பெற்ற   புலவர்   

பணத்திற்கோ  பதவிக்கோ  எந்த நாளும்

 பற்றின்றி  வாழ்ந்திருக்கும்  கவிஞர் அன்றோ?1

 

பெருவளப்  பூராரென்று  சொன்னால்  உடனே

இளஞ்செழியன்  திருமுகமே கண்ணில் தோன்றும்!

தமிழ்ப்புலமை   மேலோங்கி மிளிர்ந்த தாலே

தன்பேச்சால் கவித்திறத்தால்    சிறப்பு பெற்றார்

நாவலர்க்கும்  செழியனுக்கும்  தம்பி என்றே

நாட்டிலுள்ள  அனைவருமே  நவில்வர் அன்றோ?

பாட்டினிலே ஏட்டினிலே   தனித்த பண்பால்

பாவேந்தர்   பரம்பரைக்குப்   பெருமை  சேர்த்தார்!2

 

அலுவலுக்கும் வருவாய்க்கும்   ஆசை இன்றி

அண்ணாவின் பெரும்படையில்  களங்கள் கண்டார்;

சிலநாளில்    தமிழாசான்   பணியைச் செய்தார்;

சிலநாளில்   உணவகத்தை  நடத்தி வந்தார்

இதழ்நடத்தி  வருவாயை  இழந்தார்;எனினும்

இனமானம்   காப்பதிலே இன்பம் கண்டார்;

புலவரிவர்  புகழ்வாழ்வைச்   சுருங்கச் சொன்னால்

இலக்குவனார்   மறுபதிப்பாய்  இவரைச் சொல்வேன்!3

 

பொன்னோடு  மாணிக்கம்  சேர்ந்ததைப் போல்

சான்றோரைச்   சான்றோரே  சார்ந்து நிற்பார்;

கற்றாரைக்  கற்றாரே   விரும்பிச் சேர்வார்;

நக்கீரர்  பரணரது நட்புப் போன்றே

அஞ்சாத சிங்கமெனப்  புகழ் படைத்து

நெஞ்சுயர்த்தித் தமிழ்காத்த    இலக்கு வனார்

விஞ்சுபுகழ்  இளஞ்செழியர்  கேண்மை  தன்னை

செஞ்சொல்லால்  படைத்துள்ளார்! வாழ்க!வாழ்க!4

மலர்மாமணி, புலவரேறு பெ.அ. இளஞ்செழியன் குறித்த வாழ்த்துப் பா.
– பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்