27 APRIL U VE HOUSE OPEN

தமிழ்படித்தால்  பூரித்தே  வாழ்ந்திடுவேன்!

ஆங்கிலந்தான்  அறிவுமொழி  ஆங்கி  லத்தில்
அருங்கல்வி  கற்றால்தான்  ஏற்றம்  என்றே
தீங்கான  எண்ணத்தில்  தமிழர்  நாமோ
திசைமாறிச்  செல்கின்றோம்  வழியை  விட்டே
மாங்குயிலைத்  தன்குஞ்சாய்  வளர்க்கும்  காக்கை
மடத்தனம்போல்   குழந்தைகளைப்  பயிற்று  கின்றோம்
தாங்குகின்ற  வேர்தன்னை  மறந்து  மேலே
தரைதெரியும்  மரந்தன்னை  புகழு  கின்றோம் !

ஆங்கிலத்தைப்  படித்தால்நீ  பெருமை  யோடே
அரும்வாழ்வு  வாழ்ந்திடலாம்  பூலோ  கத்தில்
பாங்கான  சமற்கிருதம்  படித்தால்  நீயும்
பான்மையுடன்  வாழ்ந்திடலாம்  மேலோ  கத்தில்
ஏங்குகின்ற  படியிந்த  இரண்டு  மின்றி
ஏலாத  தமிழ்படிக்கப்  போவ  தாக
ஓங்கிகுரல்  முழக்குகின்றாய்  சாமி நாதா
ஒளியிழப்பாய்  எனத்தாத்தா   ஏசி  நின்றார் !

தாத்தாவின்  சொல்கேட்ட  சாமி  நாதர்
தகுதியான   தமிழ்படித்தால்  இருலோ  கத்தில்
பூத்தபெரும்  புகழோடும்  பெருமை  யோடும்
பூரித்தே  வாழ்ந்திடுவேன்  எனப்  பகன்று
மாத்தமிழின்  மீதிருந்த  பற்றால்  அன்று
மறைந்திருந்த  தமிழ்நூல்கள்   தேடித்   தேடிக்
காத்ததனை  அச்சாக்கி  உலகி  லுள்ளோர்
கவின்தமிழின்  இலக்கியங்கள்  அறியச்  செய்தார் !

இன்றவரைத்  தமிழ்த்தாத்தா  எனநாம்  போற்ற
இறவாத  புகழ்பெற்றார்  தமிழின்  பற்றால்
நன்றவர்போல்  தமிழ்மீது  பற்று  கொண்டு
நாம்தமிழைப்  பேணுவது  கடமை  யன்றோ!
என்றைக்கும்  சுயசிந்தை அறிவைக் கூட்டி
ஏற்றத்தைத்  தருவதுதாய்  மொழிதான்  என்னும்
உண்மையினை  உணர்ந்துநாமும்  மழலை  யர்க்கே
உரியதமிழ் கற்பித்தே  உயர்த்து  வோமே !
karumalaithamizhalan

பாவலர் கருமலைத்தமிழாழன்
9443458550