உறக்கம் வருமோ? சொல்வீர்!

 

எரிக்கும் வறுமைத் துயர் தாளாமல்
எரியில் மூழ்கிச் சாகத் துடிக்கும்
தமிழ்க்குடி மக்களின் அவலம் ஒருபுறம்;
கல்வி பயின்றிடப் பொருளைத் தேடிக்
கழுத்தை நெரித்திடும் வங்கிக் கடனால்
அல்லலுற்றிடும் மாணவர் ஒருபுறம்;
விரும்பிய கல்வியை வேண்டிப் பெற்றிட
வழியில்லாமல் வாடி வதங்கித்
தற்கொலைக் குழியில் அமிழ்ந்து அழிந்திடும்
பச்சிளங் குருத்துகள் படுதுயர் ஒருபுறம்;
வாடிய பயிரைக் கண்டது,ம் வருந்திச்
சாவூர் சென்றிடும் உழவர் ஒருபுறம்;;
வேலை தேடியே சாலையில் நின்றிடும்
இளைஞர் துன்ப ஓலம் ஒருபுறம்;
துயருறும் மக்கள் அயர்வைப் போக்கிட
வழியெதும் காணா ஆட்சியர் ஒருபுறம்;
இழவொலி கேளாமல் இரும்பு நெஞ்சுடன்
விழாவில் மூழ்கும் இளைஞர் ஒருபுறம்;
ஒப்பனை செய்தே திரையில் வலம்வரும்
மினுக்கிகள் எல்லாம் புத்தரைப் போன்றும்
வள்ளலார் போன்றும் வேடம் அணிந்து
அரசியல் பேசும் நாடகம் ஒருபுறம்;
நாடு நலன்பெறும் நல்வழி நோக்கா
ஊடக வல்லுநர் உண்மை மறந்து
கேடெலாம் சூழ்ந்திடக் கெடுமதி கொண்டே
விட்டில் மனிதர்க்கே விளம்பரம் நல்கிடும்
தொல்லைக் காட்சிகள் பரப்புதல் மறுபுறம்;
உய்வும் உண்டோ? மெய்யும் பொய்யும்
பகுத்துப் பார்த்து விடிவு காண்பரா?
விளம்பர வெளிச்சம் கண்ணை மறைக்குமோ?
தெரிந்தே வீழ்வரோ அழிவுப் படுகுழியில்?
என்றே எண்ணிக் கவலையில் மாழ்கும்
எனக்கு உறக்கம் வருமோ? சொல்வீர்!

(உறக்கமே வராமல் இரவைக் கழித்து வைகறையில் இட்ட பதிவு)

 

  • பேரா.முனைவர் மறைமலை  இலக்குவனார்