எங்கள் சமஉ – முனைவர் க.தமிழமல்லன்
எங்கள் சமஉ
எங்கள் சமஉ இணையே யற்றவர்!
தங்கக் கடத்தல் தலைவர்! மாற்றான்
மனைவியைக் கைப்பிடித்து மகளையும் மணந்தவர்!
மனைவணி கத்தில் மாபெரும் கொள்ளையர்!
ஒருமனை காட்டி இருவர்க்குப் பேசி!
உருப்படி யாக உயர்த்தி விற்பவர்!
காலில் விழுவதைக் கைகழுவி விட்டவர்!
காலைக் காட்டிக் கவிழ்ந்திடச் சொல்லுவார்!
மற்றவர் பணத்திலே பதாகை நட்டவர்!
கற்றவர் நல்லவர் கறையிலா அறிஞரைப்
பார்த்தால் பதறுவார்! வேர்த்துத் தம்மின்
அறைக்குள் பதுங்குவார்! அண்ணன் தம்பி,
கறைமது விற்பவன், காலைச் சொறிபவன்,
தேடித் தேடித் திறத்தைப் போற்றி
விருதுகள் வழங்குவார்! விருந்துகள் அளிப்பார்!
ஒருநாள் கூட ஓய்வினை அறியார்!
முட்டாள் மட்டி மூடன் மடையன்
மொட்டைக் குழுவின் கட்டளை கேட்பார்!
கல்விக் குதவி கேட்கும் மாதரைக்
கலவிக் கழைக்கும் கண்ணிய மானவர்!
தண்ணீர் ஊற்றித் தழைக்கும் செடிபோல்
விண்ணைத் தொட்டவர் வீடு வளர்ந்தது!
ஒன்றுமே இல்லை முன்னர் இவர்க்கு!
நன்றாய்ப் பிறரை நத்தி வாழ்ந்தே
உண்டவர்! உடையை உடுத்தவர்! மறந்தே
உதவி செய்தவர்க் குரிய வீட்டை,
நிலத்தைப் பணத்தை நீள்வயல் பரப்பை,
வலத்தால் தனக்கே வளைத்துக் கொண்டவர்!
கத்தியை நீட்டிக் கழுத்தில் வைத்துக்
கைக்குறி வாங்கிக் கைப்பற்றிக் கொண்டவர்!
இவரை மீண்டும் எங்கள் மக்கள்
இலவயப் பொருளை ஏற்று மேலும்
பணத்தைப் பெற்றுப் பரிசில் மூழ்கிப்
பிழையை மறந்து பகல்கொலை யாளியைப்
பதவியில் அமர்த்த வாக்களிப் பாரே!
செவியை விற்றுச் செவிபேசி வாங்கல்போல்
அவிந்த மனத்தனை அரவணைப் பாரே!
முனைவர் க.தமிழமல்லன்
Leave a Reply