ஏனில்லை பெரியார் படம்!- தமிழேந்தி
வரலாற்றைத் திருத்தும் வேலை
வழக்கமாய்ப் பார்ப்பான் வேலை
பெரியாரைத் தலைகீ ழாகப்
பிழைபடக்காட்டும் வேலை
சரியாய்அவ் வேலை தன்னைத்
தமிழ்த்தேசம் பேசு வோர்கள்
விரிவாகச் செய்கின் றார்கள்
விதைநெல்லை அவிக்கின் றார்கள்
புராணங்கள் பொய்கள் தம்மைப்
பூணூலார் சதிகள் தம்மை
இராப்பகல் எடுத்துச் சொல்லி
இனமானம் காத்து நின்றார்
திராவிடர் தமிழர் என்றார்
திருக்குறள் மேன்மை சொன்னார்
பொறாமையால் இவரை மாற்றான்
போலன்றோ பழிக்கின் றார்கள்!
ஒருபக்கம் சாதிக் கேடோ
உழைப்பாளர் தமைப்பி ளக்கும்
மறுபக்கம் மதத்தின் ஆட்டம்
மாத்தமிழ் நாட்டு மாண்பின்
திறத்தையே சிதைக்கும்; இந்தத்
தீமைக் கெலாம்ம ருந்து
உரத்தோடே அய்யா தந்த
ஒப்பருங் கருத்தி யல்தான்
காட்டமாய்க் கொதித்தெ ழுந்து
காங்கிரசின் தலையில் போடு
போட்டவர் பெரியார்; சீறும்
புயலாகித் தமிழர் நாடு
கேட்டவர் பெரியார்; இங்குக்
கீழ்ச்சாதி யாம்,நம் மானம்
மீட்டவர் பெரியார்; எல்லா
மேன்மைக்கும் பெரியார் தான்வேர்!
புடைப்பத்தோள் உயர்த்தி நாளும்
புலிவீரம் பேசிப் பேசித்
தடைக்கெல்லாம் பெரியார் செய்த
தவறென்றே சொல்லிச் சொல்லி
முடக்கினர் அவர்ப டத்தை
முள்ளிவாய்க்கால் முற்றந் தன்னில்!
விடைவர லாறு கூறும்
வெறுங்கூச்சல் கரைந்தே போகும்
கவிதையும் அதன் பொருளும் மிகவும் நன்றாயிருக்கின்றன.
சில புணர்ச்சிப்பிழைகளை தவித்திருக்கலாம். அவற்றை இங்கே பாருங்கள்:
“வரலாற்றைத் திருத்தும் வேலை
வழக்கமாய்ப் பார்ப்பான் வேலை”
இதில், ‘வரலாற்றைத்திருத்தும்வேலை’ என்னும் தொடர்மொழியானது, கவ்தையின் நடைக்காக மூன்றாக பிரிந்து நிற்கிறது.
இதை, ‘வரலாற்றைத்திருத்தும் வேலை’ என்று பிரித்துப்பார்த்தால் பொருளானது மாறிவிடும்! அதாவது, வேலையனது வரலாற்றை திருத்துமென்றாகிவிடும். எனவே, முதலடியை ஒரு முழுமையான தொடர்மொழியாய்க்கொண்டால்மட்டுமே நாம் எதிர்பார்க்கின்ற பொருள் சிதையாதிருக்கும்.
அடுத்தவரியைப்பார்த்தால், அதை,
‘வழக்கமாய்ப்பார்ப்பான்வேலை’
எனக்கொள்ளவேண்டும். ஏனெனில், ‘பார்ப்பானுடையவேலை’ என்பதன் தொகைநிலைதான், ‘பார்ப்பான்வேலை’ என்றிருக்கிறது.
ஆனால், ‘வழக்கமாய்ப்பார்ப்பான்’ என்பதில் வலி மிகுந்துள்ளதால், அது வினையெச்சத்தொடராகிவிடுகிறது! அதாவது, ‘பார்ப்பான்’ என்பது வினைமுற்றாகிவிடுகிறது.(பார்த்தான் பார்க்கிறான் பார்ப்பான்)
இதனால், ‘வழக்கமாய்ப்பார்ப்பான்வேலை’ என்பதில் முற்பகுதியானது வினையெச்சத்தொடராகவும் பிற்பகுதியானது வினைமுற்றுத்தொடராகவுமாகிறது. இப்போது இதற்கு பொருளென்னவென்றால், வேலைபார்க்கின்றவொருவன் அந்தவேலையை வழக்கமாய்ப்பார்ப்பானென்பதுதான்!
நாம் முதலில் ‘பார்ப்பானுடையவேலை’ எனப்பார்க்கும்போது ‘பார்ப்பான்’ என்பதை பெயராகக்கொண்டோமல்லவா?
அந்த ‘பார்ப்பான்’ என்பது, ‘வழக்கமாய்’ என்ற வினையெச்சத்துடன் வலிமிகுந்து புணர்ந்ததால் பெயராயில்லாமல் வினைமுற்றானது!
புணர்த்தாதிருந்தால் அது பெயராகவேயிருந்திருக்கும்.
இதில்மட்டுமன்றி,
‘தலைகீழாகப்பிழை’ ‘புயலாகித்தமிழர்’
‘புடைப்பத்தோள்’ ‘பேசித்தடைக்கெல்லாம்’
இவற்றிலும் வினையெச்சத்துடன் பெயர்புணர்ந்திருப்பதைப்பாருங்கள்.
தேவையற்றவிடத்தில் புணர்த்தியதால் பொருள் பொருந்தாதுபோய்விட்டதை அறிந்துகொள்வோம்.
அடுத்ததாக,
“பெரியாரைத் தலைகீ ழாகப்
பிழைபடக்காட்டும் வேலை”
என்பதைப்பாருங்கள். இதில்,
‘பெரியாரைத்தலைகீழாக’ என்பதில் இரண்டாம்வேற்றுமையுருபேற்ற ஒரு பெயரானது இன்னோரு பெயருடன்புணர்ந்திருக்கிறது.
இரண்டாம்வேற்றுமைக்கு முடிக்குஞ்சொல்லானது வினையேயன்றி பெயரன்று.
“எல்லை யின்னு மதுவும் பெயர்கொளும்
ஏனை வினைகொளும் நாலே ழிருமையும்
புல்லும் பெரும்பாலு மென்மனார் புலவர்”
– நன்னூல் – 319
எனவே, ‘பெரியாரைத்தலைகீழ்’ என்பது பொருந்தாப்புணர்ச்சி.
“சரியாய்அவ் வேலை தன்னைத்
தமிழ்த்தேசம் பேசு வோர்கள்”
என்பதில், ‘வேலைதன்னைத்தமிழ்த்தேசம்’ என்றவிடத்திலும்
“புராணங்கள் பொய்கள் தம்மைப்
பூணூலார் சதிகள் தம்மை” என்பதில்,
‘தம்மைப்பூணூலார்’ என்பதிலும்
ஐயின்முன் பெயரேபுணர்ந்திருப்பதைப்பாருங்கள்.
இப்படிப்பட்ட புணர்ச்சிப்பிழைகளை தவிர்த்தல் இன்றியமையாததன்றோ?