ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்
ஐந்தறிவின் அலறல்
நேர்ந்து விட்டால் போதும் நான் எங்காவது
வாழ்ந்து விட்டுப் போவேன்
பலி கொடுக்கிறேன் என்கிறான்
கிலி பிடிக்கிறது எனக்கு
பேரம் இவனுக்கும் கடவுளுக்கும்
சோரம் போவது என் உயிர்
நீரைத் தெளித்தால் நிச்சயம்
தலையாட்டும் எல்லா உயிரும்
மௌனம் சம்மதம் மனிதனுக்கு மட்டும் தானா?
மௌனமாய் இருந்திருக்கலாம்…
மஞ்சள் நீரைத் தெளித்ததால்
மண்டையை மண்டையை ஆட்டியது
மரணத்திற்கு வழிவகுத்தது
சாதி மத பேதம் பார்ப்பதில்லை
சாப்பிடுவதில் மட்டும்
அவனிடம் வரம் பெற
அறுபடும் என் சிரம்
சம்மதம் என்று எண்ணிக்கொண்டு
சரக்கென்று வெட்டி விட்டான்
கற்பழிப்பு மட்டுமல்ல
கருணையில்லா கொலையும் கடவுள் முன்னில்
வளர்த்த கடா மார்பில் பாயும்
மனிதனின் பழமொழி
வளர்த்தவனே வாயில் போட்டுக் கொள்வான்
எங்களின் உயிர்ப்பலி
வெட்ட வெட்ட வளரும் என்று தெரிந்துதானே
மொட்டை அடித்துக் கொள்கிறான்
வெட்டிவிட்டால் செத்துப் போகும் என்று தெரிந்தும்
எங்களை ஏன் கொல்கிறான்
உயிர் காக்கும் கடவுளே உன் முன்னே
உயிர்ப்பலி நடக்கிறது ஊமையாய் இருப்பதுமேன்?
என்னைக் கொஞ்சிய பிஞ்சுக் கரங்கள்
என் நெஞ்சில் நிற்கிறது
கொஞ்சம் கூட ஈர நெஞ்சம் இன்றிக்
கொன்று தின்கிறது
இரையிட்ட அவனுக்கே இரையானேன்
விருந்தினர் வருகை
விருந்தோம்பல் நன்று
விருந்தாகிறோம் நாங்கள்
வருந்தவில்லை நீங்கள்
ஒன்று காசாக்கி உண்ணனும்
இல்லை வெட்டி உண்ணனும்
இரக்கமில்லா மனித இனம்
இதயம் இருந்தும் நீங்கள் பிணம்
கழுத்தைத் தடவிய கடைசி நிமிடங்கள்
என் நெஞ்சு நெகிழ்ந்தது
அவன் கொஞ்சி மகிழ்கிறான் எனக்
கொஞ்சம் அசந்தேன்
கொன்று விட்டான் என்னை
வஞ்சகத்தால் வென்று விட்டான்
உயிரிழந்ததற்கு வருந்தவில்லை
உயிரென்ற உணர்வேயில்லையே
விழாக்காலம் என்றாலும்
விடுமுறைக் காலம் என்றாலும்
எங்கள் தலை விழும் காலம்
எங்கள் ஈரக்குலை விழும் நேரம்
எங்களைக் கொன்று தின்று விடும் ஏப்பம்
எங்கள் குரலாக ஒலிக்கும் வரை
நன்றி கெட்ட மனிதன் திருந்தப் போவதில்லை
உயிர்களை நேசியுங்கள் உங்கள் வீட்டுச்
செல்ல உயிரிகள் அல்ல
செல்லப்பிள்ளைகள் நாங்கள்
அறிவியல்படி ஐந்தறிவாம்….
அறிந்தோம் பகுத்தறிவு இல்லாத
ஐந்தறிவுப் பிண்டங்களை அண்டி
ஐயத்துடன் வாழும் ஆறறிவு நாங்கள்
கடவுளே கல்லாய் இருந்தது போதும்
மூடர்களின் மடமையைப் போக்க
விழித்துக் கொள்ளுங்கள்
உயிரைக் காக்கவாவது உயிர்த்தெழுங்கள்
உயிர்ப்பலியை தடுத்திடுங்கள்
ஆகா! என்ன சிந்தனை! நெஞ்சிலே இரக்கம் இருப்பவர்கள் இனி இச்செயலை செய்யமாட்டார். அருமை சகோ
அருமை கவிதை! நல்ல விதை எம் நெஞ்சில்!!