(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 94: வஞ்சியின் எழுச்சியுரை-தொடர்ச்சி)

          `வேங்கை நகரெனும் வியன்பெரு நகரினுள்

பூங்கொடி புகுந்து புதுமைத் தமிழிசை

ஆங்கண் வருவோர்க் கன்புடன் பயிற்றி

நின்றனள்; நீயும் சென்றவட் குறுகி        

          ஒன்றிப் பழகி உயர்தமிழ் இசைபயில்    235

—————————————————————

          எய்யாது – சளைக்காமல், ஒய் – விரைவுக்குறிப்பு. ஒல்கா – அடங்காத, கனல – எரிக்க.

++++++++++++++++++++++++++++++++++++++++

          குழுவில் இடம்பெறு, கொக்கென நடந்திரு,

பழகுறும் பாவையின் நற்பதம் நோக்கி

நழுவா வகையில் நயந்துரை மொழிந்திடு,

அழகிய அவளுடல் ஆடவன் நினக்கு     

          விருந்தாம் நிலையில் வென்று திரும்புதி!        240

          பொருந்தா மனமும் திருந்திய தாகிப்

பொருந்தும் மணம்பெறப் பூவை தன்னொடு

திரும்புநன் னாளைத் தேர்ந்தெதிர் நோக்கிக்

கண்படை பெறாது காத்திவண் கிடப்பேன்    

          திண்மன முடையாய் செல்லுதி’ என்றனள்;     245

கோமகன் பூங்கொடியைச் சார்தல்

          வஞ்சி உரைத்தவை செஞ்சொல் எனக்கொண்டு

எஞ்சாச் செல்வன் எளிமையை னாகி

வேங்கை நகரில் பூங்கொடி தன்பால்

தேங்கிய ஆர்வலன் சேர்ந்தனன்; ஒரு நாள்     

          தமியல் தானே நின்றவள் முன்னர்க்       250

          குறுகினன் சென்று `கூர்விழி நல்லாய்!

ஒருமொழி நின்பால் உரைத்திட விழைந்தேன்;        

திருமணங் கொள்கெனச் செப்பல்

          சிறியவள் நீதான் திருமணம் பெறாஅது

துறவுளம் கொண்டு குறளகம் புக்க       

          காரணம் என்கொல்? கடிமணம் கொள்ள        255

          ஆரணங் குன்னை அகத்தினில் நிறுத்தி

நாடொறும் தொழூஉம் ஆடவர் உளரெனச்

சேடிய ரேனும் செப்பிலர் கொல்லோ?

வாடிய இளங்கொடி வாழ்வை வெறுத்தது      

          முறையன் றெனினும் உரிமைஎன் றாகும்;      260

          ஆயினும் பிறராம் ஆடவர் தம்மை

ஆயுள் முழுதும் அனலிடைப் புழுவென

வீயுறச் செய்வது வேல்விழி முறையோ?

சேயிழை! என்மொழி சினவா திதுகேள்!

          கன்னியர் என்போர் காதலை மதிக்க     265

—————————————————————

          பூவை – பூங்கொடி, தொழூஉம் – தொழும், வீயுற – அழிய. 

+++++++++++++++++++++++++++++++++++++++++

                    முன்னுதல் வேண்டும் முரணின ராயின்

பெண்மைக் கிழுக்கெனப் பேசுமிவ் வுலகம்

எண்ணித் துணிக’ என்றனன் கோமகன்;        

பூங்கொடியின் மறுமொழி

          பூங்கொடி அவன்மனம் புரிந்தன ளாகி

          `வீங்கிய மனத்து விறலோய் கேண்மோ! 270

          மலர்தொறும் நன்மணம் மற்றவர் செயற்கையால்

நிலவுதல் இல்லை இயற்கையின் நிலைமை;

திருமண நினைவும் செயற்கையில் தோன்றி

வருவதும் இல்லை, மனத்தின் இயற்கை;         

          இல்லறம் ஒருபெரும் நல்லறம் இதனை  275

          அல்லறம் எனநான் அயர்த்தும் புகலேன்;

தனிமை வாழ்வினும் துணையுடன் வாழ்வதே

இனிமை எனப்புவி இயம்பக் கேட்டுளேன்,

ஆயினும் பொதுப்பணி ஆற்றுவோர் சிற்சிலர்         

          தோயுமிவ் வின்பம் துறப்பது மேலென   280

          ஆயும் புலத்தால் அறிந்துளேன் எனினும்

காவியும் மணியும் கடுவிலங் குரியும்

பூவிரி கானும் பூண்டேன் அல்லேன்,

உள்ளத் தெழூஉம் உணர்ச்சிகள் அடக்கி        

          உள்ளம் துறந்தேன் உலகம் துறந்திலேன்,        285

(தொடரும்)