தலைப்பு-கவிஞர் வலிமை : thalaippu_kavignar_valimai_vivekbharathy

கவிஞர் வலிமை

(அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்)

ஊரினிலே உள்ளோ ரெல்லாம்
ஊதாரித் தனமாய்த் தம்மில்
பாரினையே தூக்க வல்ல
பலமதுவு முள்ள தென்பார்
பேரினிலே பலத்தை வைத்துப்
பிதற்றிடுவோ ரல்லோம் நாங்கள்
நேரினிலே நேராய் நிற்கும்
நேர்மையே பலமாய்க் கொண்டோம் !

தூணையும் பிளக்க வல்லோம்
துயர்தமைத் துடைக்க வல்லோம்
ஆணையும் பெண்ணென் றாக்கி
அழகுகள் சமைக்க வல்லோம் !
நாணையே ஏற்றி டாமல்
நற்கணை பாய்ச்ச வல்லோம் !
ஏனைய செய்தி யெல்லாம்
எடுத்துநான் எழுது கின்றேன் !

நரியினை வாச கன்தன்
நற்றொழு கைக்கா யீசன்
பரியென அமைத்த சேதி
பாருளோர் அறிவார் ! யாமோ
அரியையே அணிலா யாக்கி
அருங்கவி படைக்க வல்லோம்
எரிதழல் தன்னைத் தண்ணீ
ரேரியென் றியம்ப வல்லோம் !

அவ்வையின் பாட்டு வன்மை
ஆணையைத் தடுத்த தந்நாள்
செவ்விய காள மேகம்
செப்பிய பாட்டின் சக்தி
கவ்விய இருளில் அந்தக்
கவினக ரழித்த தன்றோ !
இவ்வுரை உணர்வீர் எம்மால்
இயலுமே எதுவும் செய்ய !

விடுதலை வேட்கை பாய
வீறுடன் பாவேந் தன்தன்
சுடுகணை வார்த்தை யெல்லாம்
சுட்டதே பரங்கி தம்மை !
இடருறும் சாதிக் கோட்டை
இடித்ததே அன்னான் பாட்டு !
முடுக்கிய சொல்லில் வேகம்
முளைத்திடும் கேண்மின் கேண்மின் !

கண்ணகி அவளை யிந்தக்
காசினி தன்னில் நேரில்
கண்ணினால் யார்தான் கண்டார்
கவியிலே இளங்கோ கண்டான் !
மண்ணிலே போரின் தாக்கம்
மாபெரும் படைகள் தேக்கம்
பண்ணிலே அமைத்த கூத்தன்
பாட்டிலே வலிமை கண்டீர் !

நேரிலே நடப்ப தைப்போல்
நேர்த்தியாய்க் கருத்தை நாங்கள்
காரதும் பொழிதல் போலே
கவிதையால் ஊற்ற வல்லோம் !
பேருல கியற்ற வல்லோம்
பெருமைகள் காட்ட வல்லோம்
ஆரிவை செய்வார் ? அந்த
ஆண்டவன் தானே சொன்மின் !

ஆண்டவ ராவோம் சொற்கள்
ஆள்பவ ராவோம் நாங்கள்
காண்டிபன் போலே வேகக்
கணையெனுஞ் சொல்லால் வையம்
தாண்டிட வல்லோம் ! தீதைத்
தடுப்பவ ராவோம் ! பாட்டால்
வேண்டிய பொருளை யெல்லாம்
வேகமாய்ப் பற்று வோமே !

கவிஞரின் பலத்தை யாரும்
கடுகெனக் கருதல் வேண்டா
செவிக்குணா நல்கும் யாமோ
செழிப்புடைப் புலவர்க் கூட்டம் !
குவியல்கள் வேண்டோம் ! போற்றிக்
குறிகளும் வேண்டோம் ! வன்மை
அவைகளில் காட்டி நெஞ்சம்
ஆண்டிடும் மன்னர் யாமே !

வித்தக இளங்கவி
விவேக்பாரதி 

9750588007