காய்கதிர்க் கண்ணகி

(அறமே வென்றது)

 arputham perarivalan01

அறிவின் தாயே! அற்புதத் தாயே!

எரிதழல் நெஞ்சம் இடும்பை தாங்க

மூதின் மகளாய் மொய்ம்பின் உருவாய்

ஏதிலி யாயுழல் இற்றைநாள் தமிழரின்

அரசியல் உழவில் அன்புநீர் பாய்ச்சி

முரசினை அறைந்து முனைமுகம் நின்று

உரமுடன் நாளும் ஊக்கம் காட்டி

இருபத் துமூன் றாண்டுகள் முயன்று

கருவிற் சுமந்த காளையை மறுமுறை

ஈன்ற குயிலே! ஈகியின் தாயே!

தளரா உழைப்பால் தமிழ்நிலம் சுற்றி

களத்தினை வென்ற காய்கதிர்க் கண்ணகி!

உந்தன் அழுகையே உரிமை மீட்டது!

இந்தியச் சிறையை இடித்தெ றிந்தது!

வெந்தழல் நெஞ்சில் விடுதலை விழையும்

செந்தமிழ் வேங்கையை சிறைமீட் டெடுத்தது!

சமரினை வென்ற தாய்ப்புலி நீயே!

எமன் கைக்கயிற்றை இன்றுநீ அறுத்தாய்!

அமரரும் போற்றும் ஆற்றலின் உருவே!

வாய்மை வென்றது! வடக்கு தோற்றது!

ஆண்டுகள் கடந்தும் அறமே வென்றது!

ஆண்டகை பேரறி வாளனின் ஈகம்

அன்னைமண் மீட்கும் காலமும் வருமே!

arputham perarivazan01cm_seya_7