கொடுமைகள் கொளுத்த முன்வர வேண்டும்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
மங்கையரே வாருங்கள்! கண்ணகிபோல் சீறுங்கள்!
கார்குழல் சுருட்டி அள்ளி முடித்து,
குடும்பச் சுமைகளைக் கொஞ்சம் விடுத்து,
கூர்மதி படைத்த பெண்கள் கூட்டம்,
கொடுமைகள் கொளுத்த முன்வர வேண்டும்!
அறுவை சிகிச்சையில் பிள்ளையைப் பெற்று,
ஆயுள் முழுவதும் அல்லல் உற்றிட,
அரக்கத் தனியார் மருத்துவத் தொழிலே,
அடிப்படைக் காரணம் என்பதை உணர்ந்து,
அனைவர்க்கும் மருத்துவச் சேவையை முழுதாய்,
அகிலத் தரத்தில் வழங்கும் அரசை,
அச்சம் இன்றித் தேர்ந்து எடுங்கள்!
அரசுப் பள்ளியின் தரத்தைத் தாழ்த்தி,
கல்வியை வணிகம் ஆக்கும் அரசை,
“பரத்தை” என்று பழித்தலும் தகுமே!
அறத்தின் வழிநின்று அரசுப் பள்ளியின்,
தரத்தை உயர்த்தத் துடிக்கும் ஒருவனின்,
கரத்தில் ஆட்சியைக் கொடுத்திடு வீரே!
மதுவை ஒழிப்போம் என்று முழங்கி,
உங்களின் தாலியைப் பறித்து விழுங்கும்,
மதிகெட்ட மூடரின் முகத்தில் அறைவீர்!
மாற்றுச் சிந்தனை ஒன்றை வழங்கி,
மனையறம் காத்திட உதவும் அரசை,
மங்கையர் நீங்கள் தேர்ந்து எடுங்கள்!
காற்சலங்கை கட்டிக் கொண்டு, நெருப்புக்
கண்ணீர் முத்தை அதிலே கோர்த்து,
கண்ணகி போலக் குரலை உயர்த்துங்கள்!
கோபக்கனலைக் கொடுமை தீர்க்கக் கூடிப் பாய்ச்சுங்கள்!
சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
Leave a Reply