சந்திப்பு

 

எண்ணத்தின் சந்திப்பு நட்பாய் மலரும்

உள்ளத்தின் சந்திப்பு காதலாய்க் கனியும்

தாய் தந்தை சந்திப்பு மகவை ஈனும்

ஆய்வு செயல் சந்திப்பு அறிவைப் பேணும்

அறிஞரின் சந்திப்பு ஆக்கம் அளிக்கும்

கலைஞரின் சந்திப்பு ஊக்கம் அளிக்கும்

மறவரின் சந்திப்பு வீரம் ஊட்டும்

அறத்தார் சந்திப்பு வறுமை ஓட்டும்

எழுத்தின் சந்திப்பு சொல்லாய் மாறும்

சொல்லின் சந்திப்பு வரியாய் மாறும்

வரியின் சந்திப்பு கவியாய் மாறும்

கவியின் சந்திப்பு காவியம் ஆகும்

உழைப்போர் சந்திப்பு உயர்வைச் சேர்க்கும்

விலைமகள் சந்திப்பு இழிவைச் சேர்க்கும்

முதலாளி சந்திப்பு வறுமையை மிகுக்கும்

வறியோர் சந்திப்பு கலையாய் மாறும்

உரிய அச்சந்திப்பும் நிகழ்ந்துவிட்டால்

இனியில்லை என்ற சொல் எங்கும் இல்லை

தனிஒருவன் ஏய்ப்பதற்கு வழியும் இல்லை

இனியேனும் சந்தித்துச் சிந்திப்போமே!

இனிதாகும் நம் வாழ்வும் நல்மனம் கொண்டே!

– இலக்குவனார் திருவள்ளுவன் (1973)