–   முனைவர். எழில்வேந்தன்

உள்ளங்கைக்குள் ஒளிந்திருக்கும்poet ezhilventhan

எதிர்காலத்தை மறந்து,

இன்றைய உலகம்

இரைதேட வைத்ததால்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கின்றன

பிஞ்சு விரல்கள்.

 

வயதுக்கு வந்தால்

வாசலுக்குச் செல்லவும் தடைசொல்லி

பருவம் வந்ததும்

உருவம் மறைக்கவும் உடை சொல்லி

பெண்ணின் பெருமை பேசிவந்த

பெற்ற உறவுகளே

வறுமை வந்தால்

எசமானர் இல்லங்களுக்கு

எடுபிடி வேலைக்கு அனுப்பும்.

 

வாழ்வாதாரங்களை எல்லாம்

வறுமையின் கொடுங்கரங்கள்

நொறுக்கிப் போட்டதால்

வசதிகளின் தாழ்வாரங்களில்

வதைபடும் தளிர்கள்.

 

நீதியின் குரல்வளை

நெறிக்கப் பட்டதால்

வீதியில் கிடக்கும்

பிரம்மாக்கள் பெற்ற

பிள்ளைகள் இவர்கள்.

 

வண்ணங்களோடு வளையவரும்

வசந்தக் கனவுகளை

இமைகளில் தேக்கியிருந்தாலும்

இவர்களின் விழிகளில்

சிக்கிக் கொண்டிருக்கும்

சின்ன வெளிச்சத்தையும்

சிதைப்பவர்கள் யாரென்று தெரியாதா ..?

 

மாநகரச் சாலைகளின்

சந்திப்புகள் தோறும்

அவிழ்ந்து கிடக்கும்

அபாயத்தையும் மீறி

பச்சை விளக்குக்காகக் காத்திருக்கும்

வாகன ஓட்டிகளிடம்

பிச்சை கேட்கும் பிஞ்சு விரல்கள்.

 

நதியின் பிழையுமல்ல

விதியின் பிழையுமல்ல

ஈன்று புறந்தோரின்

நிதியின் பிழையால்

நிகழ்ந்து கொண்டேயிருக்கும்

நிரந்தரக் கொடுமையன்றொ . .!

 

வித்யாலயங்கள்

விலக்கி வைத்ததால்

வீதியோரங்களில் வீசப்பட்ட

விருப்பாட்சி மலர்கள்.

 

எண்ணையும் எழுத்தையும்

எழுதிபார்க்க வேண்டிய

எதிர்கால ஞானிகள்

அழுக்குப் பாத்திரங்களைக்

கழுவிக் கொண்டிருக்கும் அவலம்.

 

புலரும் பொழுதில்

புத்தகம் பயில வேண்டியவர்கள்

புலராத பொழுதிலும்

பட்டறையை நோக்கி

நடைபயின்றிடும் நலிவுகள்.

 

விளையாட்டுப் போட்டிகளில்

வெற்றிக் கோப்பைகளை ஏந்திவர வேண்டிய

இளைய கரங்கள் பாதையோரங்களில்

குப்பையைப் பொறுக்கிட

குனிந்து கிடக்கின்றன.

 

வண்ணத் தூரிகையால்

வானவில்லின் வண்ணங்கள் குழைத்து

எண்ணங்களில் விரியும்

ஓவியம் தீட்டிட வேண்டிய

கரங்கள்

காலணிகளுக்கு மெருகு கூட்டி

காசுக்காக கையேந்துகின்றன.

 

பூவின் சுமைகூட

தாங்கிட வொண்ணாத

மென்மை அன்னங்கள்

நோகும் சுமையையும்

 

ஓய்வின்றி சுமக்கும்

கோவேறு கழுதைகளாய் . .

 

பூமி முழுதும்

புதிய மணம் கமழ்ந்திட

பூத்துக் குலுங்கவேண்டிய பூங்கரங்கள்

கந்தகக் கிடங்குகளில்

வெந்து தணிந்திடும்

சந்தன மரங்களாய் . .

 

ஒளியின் துளியை

உதிர்த்து வைக்கும்

ஒவ்வொரு தீக்குச்சியின்

உராய்வுக்குப் பின்னாலும்

இருளின் குழியில் வீழ்த்தப்பட்டிருக்கும்

சிறகொடிக்கப்பட்ட சின்னப் பறவைகளின்

சிணுங்கல்களே கேட்கின்றன.

 

விதவிதமான வண்ணங்களில்

பொலிவாகப் பூத்திடும் மத்தாப்புகளின்

வெளிச்சச் சிதறல்கள் ஒவ்வொன்றிலும்

பள்ளிக்குச் செல்லாத

பட்டாம்பூச்சிகளின் புலம்பல்களே

செவிப்பறைகளில் வந்து சிராய்க்கின்றன.