சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை – குதம்பைச் சித்தர்
சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை – குதம்பைச் சித்தர்
ஆண்சாதி பெண்சாதி யாகும் இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்
வீண்சாதி மற்றவெல்லாம்.
பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும்
தீர்ப்பாகச் சொல்வதென்ன? குதம்பாய்
தீர்ப்பாகச் சொல்வதென்ன?
பார்ப்பாரைக் கர்த்தர் பறையரைப் போலவே
தீர்ப்பாய்ப் படைத்தாரடி குதம்பாய்
தீர்ப்பாய்ப் படைத்தாரடி.
பற்பல சாதியாய்ப் பாரிற் பகுத்தது
கற்பனை ஆகுமடி குதம்பாய்
கற்பனை ஆகுமடி.
சுட்டிடுஞ் சாதிப்பேர் கட்டுச்சொல் லல்லாமல்
தொட்டிடும் வத்தல்லவே குதம்பாய்
தொட்டிடும் வத்தல்லவே.
ஆதி பரப்பிரமம் ஆக்கு மக்காலையில்
சாதிகள் இல்லையடி குதம்பாய்
சாதிகள் இல்லையடி.
சாதிவேறு என்றே தரம்பிரிப் போருக்குச்
சோதிவே றாகுமடி குதம்பாய்
சோதிவே றாகுமடி.
நீதிமானென்றே நெறியாய் இருப்பானே
சாதிமா னாவாடி குதம்பாய்
சாதிமா னாவாடி.
சாதி ஒன்றில்லை சமயம் ஒன்றில்லை என்று
ஓதி உணர்ந் தறிவாய் குதம்பாய்
ஓதி உணர்ந் தறிவாய்.
– குதம்பைச் சித்தர்
சித்தர் பாடல் என்றாலே எப்பொழுதும் மருத்துவம் தொடர்பான பாடல்களை மட்டும்தாம் எல்லாரும் வெளியிடுவார்கள். இப்படிப்பட்ட சித்தர் பாடல்களை அகரமுதலவில் மட்டும்தான் பார்க்க முடியும். மிக்க நன்றி ஐயா!