செம்பரல் முரம்பு – உருத்திரா இ.பரமசிவன்
செம்பரல் முரம்பு – உருத்திரா இ.பரமசிவன்
செம்பரல் முரம்பில் நீள்வழி வெங்கான்
இலம் அசைஇ நெருப்பே பூத்தன்ன
கடும்பொறை அடுக்கம் திரிசுரம் வாங்க
மரல் தழீஇய மண்ணுழைப் பாம்பு
கூர்வான் படுத்த எருவைச்சேவல் நீள்விரல்செத்து
அகன்சிறை விரித்த அடுநிழல் ஆங்கு
கண்டே அஞ்சி அண்ணிய சிறுபூப்
பைம்புதல் ஒளிக்கும் காட்சியும் மலியும்.
காழ்த்த கடுமுள் நெடுமரம் மறிப்ப
ஆளி எதிரிய அவிர்நிழல் அண்டும்
சிறுமுயல் தவிப்ப வெள்ளிய பருதி
கனல் பெய் ஆறு கடாத்த காலையும்
இறைமுன் எல்வளை பற்றிச்செயிர்க்கும்
நெஞ்சம் தோய்ந்து ஏய்க்கும் அவள்
ஒள்வீ நகை அவிழ் கள்ளக்கூட்டம்
கண்டிசின் அவனும் கல் இடறி வீழ
இடர்ப்பட்ட ஞான்றும் இனியவே நகைக்கும்.
பொழிப்புரை :
செம்மண் தரைப் பருக்கைக்கற்கள் நிறைந்த கரடு முரடான நெடிய வழியில் வெப்பம் மிகுந்த காட்டில் தலைவன் பொருள்தேடிச் செல்கிறான். வழியில் இலவ மரத்துப்பூக்கள் நெருப்புப்பூக்கள் போன்று மலர்ந்திருக்கின்றன.இறுகிய பாறைகள் மலைகள் போன்று எதிர்ப்பட அதைத்தொடர்ந்து வளைந்து வளைந்து (திருகி)செல்லும் செல்லும் காட்டுவழி (சுரம்)தொடர்ந்து வளைந்து செல்ல (வாங்க) அவனும் செல்கிறான். அப்போது மடல் எனும் காட்டுச்செடி (சிறிய வரிகள் நிறைந்து நீண்டு இருக்கும்) ஒரு மண்ணுழிப்பாம்பு போல் தெரிய அதை அருகே உள்ள மண்ணுழிப்பாம்பு சுற்றித்தழுவி இருக்கும். அதன் கூரிய பார்வையில் படும்படி வானத்தில் பறக்கும் ஆண்பருந்து நீண்ட விரல்களைப் போன்ற (நீள்விரல் செத்து) சிறகுகளை அகல விரித்துப் பறக்கும்.அதன் வெயில் கலந்த நிழல் கூட அதற்கு தென்படும். அதனல் அஞ்சி அருகில் உள்ள (அண்ணிய)சிறு பூக்கள் பூத்த புதருக்குள் மறையும். இது போன்ற காட்சிகள் நிறைந்ததே அக்காட்டு வழி.அது மட்டுமின்றி முற்றிய உயரமான முள் மரங்கள் எதிர்ப்படும். (சங்ககாலத்தில் இருப்பதாக சொல்லப்படும்) யாளி எனும் விலங்கின் உருவத்தைப்போன்ற (எதிரிய) வெம்மை மிகுந்த நிழலை அண்டிநிற்கும் சிறுமுயலும் அங்கே வழியில் தவித்து நிற்கும். அத்தகைய வெள்ளைச்சூரியன் (வெள்ளிய பருதி…இங்கே பருதி என்பது சூரியனின் வட்டத்தைக்குறிக்கும்.பரிதி என்பது தான் சூரியனைக்குறிப்பது) நெருப்பு மழை பொழியும் காட்டாற்றை கடந்து கொண்டிருக்கும் பொழுதிலும் தலைவனின் நெஞ்சில் தலைவியின் அழகு மயக்கம் ஊட்டுகிறது. ஒளிபொருந்திய அழகிய வளைகள் (எல்வளை)அணிந்த அவள் முன்கையை (இறை முன்)ப் பற்றி உணர்ச்சியினால் உந்தப்படுகிறான். அவளின் சிறு சிறு முறுவல்கள் ஒளிரும் சின்னஞ்சிறிய பூக்களைப்போன்று இதழ் சிதறி கள்ளத்தனமான நகைப்புக் கூட்டங்களைக்கொண்டு அவன் நெஞ்சம் புகுந்து ஏமாற்றும். இந்த கற்பனைக்காட்சிகளில் திளைத்த அவனோ காலில் கல் இடறி விழுகின்றான்.அப்பொழுதும் கூட அவளைக்கண்டு இனிமை நெகிழ சிரித்து மகிழ்கின்றான்.
சங்கநடைச்செய்யுள் கவிதையும் பொழிப்புரையும் :
உருத்திரா இ.பரமசிவன்
Leave a Reply