தனக்குவமை இல்லாத் தமிழ்! – சந்தர் சுப்ரமணியன்
தொன்மத்தில் சொல்வளத்தில் தூய்வடிவில் மாறுகின்ற
இன்றைக்கும் ஏற்ற எழில்நடையில் – நின்று
தினம்வளரும் நேர்இல் திறமிவற்றில் என்றும்
தனக்குவமை இல்லாத் தமிழ்!
நாவில் நடைபழகி நர்த்தனங்கள் ஆடியொலி
மேவி மொழியாக மெலெழும்பும் – பூவில்
அனைத்துக்கும் முந்தோன்றி ஆளு(ம்)மொழி கட்குள்
தனக்குவமை இல்லாத் தமிழ்!
ஓசை வகைவிளம்பி உட்புணர்வுக்(கு) ஓர்முறையைப்
பேசுமொழி ஒன்றேகாண் பூவுலகில் – தேசோ(டு)
இனிக்கும் இயல்வடிவில் ஏழிசையின் ஈர்ப்பில்
தனக்குவமை இல்லாத் தமிழ்!
முன்னைக்கு முன்னை முதுமகளோ! இல்லையிவள்
பின்னை வருமொழிகொள் பேரெழிலோ! – என்னே!
அனைத்து மொழிகட்குள் அன்றின்றென் றெங்கும்
தனக்குவமை இல்லாத் தமிழ்!
விஞ்சும் விருப்பங்கள் வித்தாகி மேலெழுந்து
கொஞ்சும் மொழியாகக் கொப்புளிக்கும் – நெஞ்சின்
அனற்சுடராய் வாயகலில் அற்புதங்கள் செய்யும்
தனக்குவமை இல்லாத் தமிழ்!
கன்னிக்கும் உண்டோகாண் கர்ப்பம்! குமரியிவள்
தன்னைக் குழைத்துமொழி தந்துநின்றாள்! – முன்னி
அனையாகி மண்ணில் அருமொழிகள் ஆக்கும்
தனக்குவமை இல்லாத் தமிழ்!
ஆண்டுகள் ஆயிரமாய் ஆனபினும் காப்பியத்தால்
மாண்டோர் புகழ்பரப்பும் மாமொழியாம் – யாண்டும்
நினைவலைகள் நீளும் நெடுங்கடலாய் நிற்கும்
தனக்குவமை இல்லாத் தமிழ்!
பத்தும் பதினெட்டும் பார்புகழும் எட்டுமிங்கே
சொத்தென்று கொண்டுயர்ந்த தூய்மொழியாள்! – நித்தம்
இனிக்கின்ற வாறே இலக்கியங்கள் சேர்க்கும்
தனக்குவமை இல்லாத் தமிழ்!
சங்கம் அமைத்தன்றே சான்றோர்கள் மானுடத்தில்
முங்கி முதற்கண்ட முத்திதுவே! – பொங்கி,
கனக்கின்ற கற்பனைசேர் காவியங்கள் காக்கும்
தனக்குவமை இல்லாத் தமிழ்
நற்சொற்கள் நூறிருந்தும் நம்வாழ்வில் நாவடக்கம்
அற்றேனோ வீணாய் அழிகின்றோம்? – சுற்றும்
கனியிருக்கக் காய்கவரும் காதலேன் என்னும்
தனக்குவமை இல்லாத் தமிழ்!
அற்புதம். நல்ல கருத்துச் செழுமை. வெண்பாவின் சுகந்த ஓட்டம் எல்லாம் என்னைக் கவர்ந்தது,
வாழ்க சந்தர் கவிஞர்!
யோகியார்
ஆறு பெருக்கிய நடை
அலை அணிவித்த உடை
சொல் ஆழ்ந்த ஓட்டம்
பொருள் சுடர்ந்த திறம்
அத்தனையும் கொண்ட
அழகுப்பா
சந்தர் சுப்ரமணியனின்
தமிழ்ப்பா!
வாழ்த்துக்களுடன்
ருத்ரா என்ற
கல்லிடையன்.