தமிழர் வாழ்வுக்கு ஊன்றுகோல் பாரதிதாசன்

மூவேந்தன் வளர்த்த முதிர்கனித் தமிழை உண்டு

நாவேந்தன் தானாகி நாளெல்லாம் பாட்டெழுதி

காவேந்தன் மணமாகி கவிதைகள் பலப்பாடி

பாவேந்தன் எனப் பேர்பெற்ற பாரதிதாசன்

 

புதுவையில் உதித்த புதியதோர் விடியல்

பூந்தமிழுக்குக் கிடைத்த பொற்குவிப் புதையல்

எதுகையில் மோனையில் இசையிடும் தென்றல்

ஏழ்மையில் திகந்த தூய்மையின் திங்கள்

 

சித்திரை மாதத்தில் ஊறும் கனலூற்று

செந்தமிழ்ச் சொல்லாய் சீறும் அனல்காற்று

முத்திரைப் பதித்த கதிரின் ஒளிக்கீற்று

முற்போக்குச் சிந்தையில் வேதியல் வீச்சு

 

வாத்தியார் பணியில் வாழ்வேணி ஏறியவன்

ஆத்திகனாய் முப்பதாண்டு ஆற்றலுடன் வாழ்ந்தவன்

நாத்திகம் பேசியே நாத்தழும் பேறியவன்; சமூக

நாற்றங்களை நடுத்தெருவில் நிற்கவைத்துச் சாடியவன்

 

வாழ்ந்ததோ எழுபத்து மூன்று ஆண்டுகள்

வரைந்ததோ எழுபத்து இரண்டு நூல்கள்

வாழ்க்கையில் விளைத்தது அளப்பரிய சான்றுகள்; தமிழர்

வாழ்வுக்கு வையத்தில் அவனும் ஓர் ஊன்றுகோல்!

கவிஞர் நாகூர் காதர் ஒலி,

வைரத்தூறல் – கவிதைத் தொகுப்பு