தமிழெல்லாம் எந்தமக்கே அருளு வாயே! – கவிக்கோ ஞானச்செல்வன்
ஞாலமெனும் கோளமதில் முன்பி றந்து
ஞாயிற்றின் சுடரெனவே ஒளிப ரப்பிக்
காலமெலாம் நின்றிருக்கும் நூல்கள் தந்து
கவின்பெற்றுக் கலையுற்று வாழும் தாயே
தாலசைத்தால் தமிழாகும் இயற்கை சொல்லும்
தத்துவத்தின் வித்தகமாய் இலங்கு வாயே
சாலவுனை வேண்டுவது தவத்தின் மேலாம்
தமிழெல்லாம் எந்தமக்கே அருளு வாயே!
நற்றிணையும் குறுந்தொகையாம் வரிசை எட்டும்
நல்லதிரு முருகாற்றுப் படைதொ டங்கிச்
சொற்றிறங்கள் காட்டுகின்ற பத்துப் பாட்டும்
சுவையூட்டும் காப்பியங்கள் ஐந்தும் ஆகி
மற்றுமுயர் பலசமய நூல்கள் தாமும்
மாற்றரிய புதுமைசெயும் புலவோர் நூலும்
எற்றானும் உனைமறவா நிலையில் நாளும்
எழுத்தெண்ணிக் கற்கின்ற புலமை வேண்டும்!
Leave a Reply