ayvakainilam

தமிழ் அந்தாதி

 1. இனிக்கும் விருந்தாகி இன்சுவைத் தேனாய்
  கனிக்குள் அமுதாய் கவியாய் – மனத்திடை
  ஆடிடும் காரிகையாய் ஆகும் தமிழ்பேசி
  நாடுக நாளும் நயம் (01)
 2. நயமாய் சொற்புனைந்து நல்கி விருத்த
  மயமாய் விளைவித்தான் விந்தை – அயமென
  வீழும்நம் கம்பன்தன் பாடல், தமிழ்ச்சுவை
  வாழப் பிறந்த வளம் (02)
  (அயம் – சுனை)
 3. வளமாய்த் தமிழ்பேசி, வார்த்தைகொண்(டு) ஆட்டக்
  களத்தே களித்தாடு; காணும் வளத்தால்
  பயின்று தமிழ்நன்கு பாநூறு பாடி
  முயன்றுயர்வாய் மேலே முனைந்து (03)
 4. முனைந்தவன் நெய்தமுழு வேதக் குறிஞ்சி
  புனைந்தவள் கொண்டாள் பெருமை – குணங்கொள
  சொல்லில் மருதென முப்பாலைக் கண்டதுமே
  முல்லைச் சிரிப்பாய் முகம் (04)
  வேதக்குறிஞ்சி – அரிதிற் கிடைத்த படைப்பு (உருவகம்)
  மருது – மருந்து
  (ஐவகை நிலமும் வருமாறு எழுதப்பட்ட பாடல்)
 5. முகத்திலக வாசனையாம் மூவிதமாம் எங்கும்
  புகழ்மணக்கும் ஓரணங்காம் பாரில் – மிகப்பல
  சீர்கொள் மொழியாம் சினந்திடின் சீறிடும்
  கூர்வாளாம் செந்தமிழே கூறு (05)
  (தமிழ்த்தாய் வாழ்த்தை தழுவியது)
 6. கூறாயோர் நூறுவண்ணம் கொண்டும் குருதிசேர்
  ஆறாம் அதற்கோர் வகையேனோ – மாறாதோ
  வன்பரணி? வன்மையது வாராது சிந்தென
  வெண்பனியைச் சிந்தும் விரல் (06)
 7. விரவார் உனக்குண்டோ வல்லினம் கொண்டும்
  இருபங்கு மெல்லிடைகொள் ஏதை – மருகியுன்
  பண்ணுக்குப் பாப்புணையும் பாவலர் தம்நெஞ்சத்(து)
  அன்புக்கு முண்டோ அழிவு (07)

விரவார் – பகைவர்; ஏதை – பேதை

8. அழிந்தாயோ யென்றுனை எண்ணும் மொழிகட்
கழிந்தேக, வென்றாய்காண் காலம் – வழியோடி
வேறுற்று பல்விதமாய் மாறியும் மாறாதே
நீறிட்ட செந்தழலாய் மெய் (08)

9.மெய்யன்றோ வெண்பா நிதம்பழக சொல்லைக்
கசக்கி தளைசேர் கவியுன் வசமாக
நேர்வரும் காய்விளம் நீளமா வோடுநிரை
சேர்தலுஞ் சீரென்றே செப்பு (09)

10.செப்புவிதி ஈறோடி சேருகரம் இய்யாகி
ஒப்பாதி நீண்டொற்றி ரண்டாகி – தப்பாமுன்
ஆடுமெய் தான்திரிய அன்புடனே ஓரினம்
கூடி வளர்க்குங் குணம் (10)

“ஈறு போதல், இடை உகரம் இய்யாதல், ஆதி நீடல், தன் ஒற்று இரட்டல், முன்னின்ற மெய் திரிதல், இனம் மிகல் என்பது பண்புக்கியல்பே” என்ற விதியை அடிப்படியாகக் கொண்ட கருத்து.
குணம் – பண்பு

11. குணம்நாடி கொள்வனக் கொள்தமிழ் நாடி
புனல்நாடும் புல்லாகும் பூவும் – கனவன்று;
திட்டமாய் பாச்சுவை தூய்க்கும் புவிதிசை
எட்டும் தமிழறிவை இனிதே! (11)

ChandarS02– சந்தர் சுப்பிரமணியன்

http://movingmoon.com/node/117