தலைவன் தேரின் ஒலி  வருகையே புத்தாண்டு வருகை

 

கல் பொருதிறங்கும் மல்லல் யாறு

புல் தடவி பூக்கள் வருடி

நறவம் தூஉய் பல்லிணர்ப் பரவி

வள்ளி படர்ந்த வளமண் பொள்ளி

புடை யுடுத்த மன்றுகள் ஆக்கி

வேங்கை படுத்த வேங்கை வெரூஉய்

பெயரும் காட்சியும் மலியும்.

அற்றை வானின் அகல்வாய் திங்கள்

ஒளியுமிழ் காலை வருவாய் என்ன‌

விழிஅவிழ் குவளை விரியாநின்று

நோதல் யான் உற்றது அறிவையோ

வாடிய காந்தள் அன்ன ஊழியும்

கொடுவிரல் நுடங்கி வீழ்ந்ததும் அறிவையோ.

வளி அவி அடவி வெம்மை தாளா

ஆயிரங்கண்ணின் நுண்ணறைச்சிறையில்

ஆலும் ஆரும் வால்நீள் தும்பி

இனத்தொடு பெயரும் காட்சியும் மலியும்.

எல்லா! பொறிச்சிறைத்தும்பியும்

இமை அதிர்ந்து உதிர்க்கும் உதிர்க்கும்

ஆயிரம் ஆண்டுகள் தோற்றும்

காலம் நீள்பு கடுங்கண் இடையும்

ஒரு புது ஆண்டாய் மின்னல் விழிப்ப‌

என்று தருங்கொல் இரட்டும் படுமணி

நின் தேரின் இன்னொலி ஆங்கு.

அறியா நின்று ஆவிஉதிர்த்து

ஆவி விதிர்த்து மீளும் மீளும்

செங்கோட்டு யாழென நடுங்குவன் யானே!

 

சுருக்க உரை:

 

ஓலைச்சுவடிகளின் தொன்மை காலத்தும் ஒரு தலைவி வெளிப்படுத்தும் புத்தாண்டு ஏக்கம் பற்றிய பாடல் இது. தலைவன் வரவு நோக்கி காத்து காத்து நொந்து போன தலைவிக்கு அது நெடிய உகம் ஆனது. திடீர் என்று மின்னல் வெட்டுபோல் தலைவன் வரும் தேரின் ஒலி கேட்கும். அந்தத் தருணமே அவளுக்குப் புத்தாண்டு.

  • உருத்திரா இ பரமசிவன்

epsivan@gmail.com