57thaay

தலைவருடி எனையணைத்து
தனதுதிரம் தனைப்பாலாய்
மனமுருகித் தந்தவளே
மாநிலத்தில் தாய்தானே

மடிமீது எனைவைத்து
மாரியென முத்தமிட்டு
விழிமூடித் தூங்காமல்
விழித்தவளும் தாய்தானே

படிமீது கிடந்தழுது
பலமுறையும் வேண்டிநின்று
பாருலகில் எனைப்பெற்ற
பண்புடையோள் தாய்தானே

விரதமெலாம் பூண்டொழுகி
விதியினையே விரட்டிவிட்டு
வித்தகனாய் இவ்வுலகில்
விதைத்தவளும் தாய்தானே

மலடியென மற்றவர்கள்
மனமுடையப் பேசிடினும்
மால்மருகன் தனைவேண்டி
மாற்றியதும் தாய்தானே

நிலவுலகில் பலபிறவி
வந்துற்ற போதினிலும்
நிம்மதியைத் தருவதற்கு
நிற்பவளே தாய்தானே

தாய்மைக்கு இலக்கணமே
தாய்மைதான் ஆகிவிடும்
தாய்போல இவ்வுலகில்
தகவுடையார் யாருமுண்டோ

வேருக்கு நீராகத்
தாயிருப்பாள் எப்போதும்
தாயிருக்கும் வீட்டினிலே
அனைத்துமே நிறைந்திருக்கும்

நோய்க்குமவள் மருந்தாவாள்
நுடங்கிவிடின் துடித்திடுவாள்
வாய்க்குமவள் சுவையாவாள்
வல்லமையின் உருவாவாள்

தாய்க்குலமே இல்லையெனின்
தரணிநிலை என்னாகும்
தாய்தன்னைப் போற்றிடுவோம்
தரணியிலே உயர்ந்திடுவோம்

M.Jayarasasarma01