[ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும் ஒரு பொது மொழி வேண்டுமென்றும், அந்தப் பொது மொழியாக இருக்கத் தகுந்தது இந்தியே என்றும் 14.09.2019, 2019 அன்று அறிவித்தார். நாடுமுழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்தன. அவற்றில் ஒன்று, வடக்கு கேரளா,மலப்புரத்தைச் சார்ந்த  கவிஞர், பேராசிரியர் இரகீம் பொன்னாடு எழுதிய இக்கவிதை. மொழித்தடை என்ற பெயரில அவர் எழுதியதை, ‘தாய்மொழிச்சொற்களைப் பயன்பாடுத்தாதீர்’ என்னும் தலைப்பில் நான்  மொழிபெயர்த்து அளிக்கின்றேன்.

இந்தியப் பண்பாட்டு அவையத் தளத்தில்  indianculturalforum.in  மலையாளக் கவிதையுடன், இந்தி, தெலுங்கு, கன்னடம் மொழிபெயர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ‘விடுதலை’ நாளிதழில் தமிழ் மொழி பெயர்ப்பு வந்துள்ளது.  ஆங்கிலத்திலிருந்து அக்கவிதை மொழி பெயர்க்கபட்டுள்ளதால் நான் மலையாளத்திலிருந்து மொழி பெயர்த்துத் தருகின்றேன்.

 பணத்தாள் மதிப்பைச் செல்லாததாக ஆக்கியமத்திய அரசின் அறிவிப்பால் எழுந்த அவலங்களை நினைவூட்டி இவர் இக்கவிதையைச் சிறப்பாகப் படைத்துள்ளார். இதனைக் கற்பனை என்று புறந்தள்ள இயலா நிலையில்தான் நாடு உள்ளது.

– இலக்குவனார் திருவள்ளுவன் ]

 

உங்கள் சொற்களுக்கு இடமில்லை இனிமேல்!

நள்ளிரவு ஒன்றில் அவர்கள்

 மொழிகளைத் தடை செய்தனர்

“இன்று முதல்

ஒரு மொழியை  மட்டுமே பேச வேண்டும்

உங்கள் மொழிக்கு வேலையில்லை

அஞ்சலகத்தில் பழைய மொழிச் சொற்களைக் கொடுத்தால்

புதிய சொற்கள் கிட்டும்”

இந்த அறிவிப்பே எங்கும் கேட்டது !

 

உறக்கத்தில் எழுந்த மக்கள்

அவசரக் கதியில் ஓடினார்கள்

புதிய சொற்களைத் தேடி!

 

எங்கும் அமைதி! அமைதி! அமைதி மட்டுமே!

குழந்தைகளின் வாய்களை அன்னையர் பொத்தினர்

வயதானவர்களின் வாய்களில் துணிகளைத் திணித்தனர்

கோயில்களில் பாடலும் இசையும் நிறுத்தப்பட்டன

 பள்ளிவாசல்களில் தொழுகை அழைப்பும்தான்

வானொலிகளில் வீணை யொலி மட்டுமே

தொலைக்காட்சிளில் சைகை மொழி மட்டுமே

செய்தித்தாள்களாக வெள்ளைத்தாள்கள் மட்டுமே

 விசைப்பலகைகளில் அமைதி மட்டுமே

அலைபேசித் திரைகளில் சின்னங்கள் மட்டுமே

 

அஞ்சலக வரிசைகளில் வாய் மூடி இருந்தனர்

நாளொன்றுக்கு இரு சொற்கள் மட்டுமே

கொடுக்கப்படும் என்பதே ஆணை!

 

 சிலர் கோணிப்பைகளில் சொற்களைக் கொண்டு வந்தனர்

புத்தகப் பைகளிலும் சோற்றுப் பாத்திரங்களிலும்

சொற்களை அடைத்துப் பிள்ளைகளும் இருந்தனர்

‘அம்மா’ எனும் சொல்லைக் கொடுத்தவர்கள்  

‘மா’ எனும் சொல் பெற்றார்கள்

அப்பா’ எனும் சொல்லை அளித்த வர்களுக்குப்,

‘பாபா’ எனும் சொல்லைத் தந்தனர்.

‘சாக்லெட்டு’, ‘கேம்’, சொற்களை மாற்ற

வரிசைகளில் காத்திருந்த சிறுவர்கள்

திருப்பி அனுப்பப் பட்டனர்.

நாட்டுச் சொற்களை மட்டுமே மாற்ற முடியுமாம்!

ஏனெனில் பிறவற்றிற்கு மாற்றுச் சொற்கள் இல்லை!

‘தொந்தரவு’ , ‘இடையூறு’ சொற்களையும்

மாற்ற முடியவில்லை

‘கத்தி’ என்னும் சொல்லை மாற்ற வந்தவர்

விரட்டி யடிக்கப்பட்டார்

‘கஞ்சா’ சொல்லை மாற்றவந்தவர்

காவலரால் கைது செய்யப்பட்டார்

 

வரிசையில் நின்ற வயதானவர் ஒருவர்

களைத்துத் தளர்ந்து விழுந்தார்

வாய்க்குக் கேட்டார் தண்ணீர்!

வாயில் விழுந்தன குண்டுகள்!

பிற மொழி பேசலாமோ?

 

செல்லாச் சொற்களின்

பொல்லாக் காட்சியால்

நொந்து வீடு திரும்பினேன்

முற்றமெங்கும் சொற்களின் குவியல்

மாற்றுச் சொற்களுக்காக வீட்டிலுள்ளவர்களால்

புறத்தே தள்ளப்பட்டவை

பழைய புதிய சொற்கள்

எழுதப்படாச் சொற்களும்

 

தந்தையின் தலையணைக்கு அடியில்

மறைந்திருக்கும் சொற்களை மாற்ற இயலுமா?

தாயின் நீர்ச்சீலைகளில் நான் கேட்டிராத

சொற்கள் உள்ளனவே! மாற்ற இயலுமா

 

மனைவி அடுப்படிக்குள் அழைத்துச் சென்றாள்

சமையல் சொற்கள் எல்லாம் நிறைந்து இருந்தன

மகளின் புத்தகப் பை முழுவதும்

வீட்டுப்பாடச் சொற்கள் அடைந்திருந்தன

மகனின் பெட்டியிலோ விளையாட்டுச் சொற்கள்

மறைந்து போகத்தான் இவையா?

எப்படிச் சொல்வேன் இவர்களிடம்

இரு சொற்களை மட்டுமே மாற்ற முடியுமென்று

 

எந்த இரு சொற்களை மாற்றுவது?

தேடினேன் தேடினேன் நெடுநேரம் தேடினேன்!

இறுதியில் ஒவ்வொரு கையிலும்

தடுத்தாட் கொண்ட வலிய சொல் ஒவ்வொன்று!  .

முழு வலிமையை ப் பயன்படுத்தி

அவற்றை வெளியே இழுத்தேன்

.

அவை ‘சனநாயகம்’, ‘பன்முகத்தன்மை’!

 

இரண்டு சொற்களை எடுத்துக் கொண்டு

மாற்றுச்சொற்கள் நாடியே

அஞ்சலகம் ஓடினோம்

அதற்குள் இருட்டி விட்டது.

மாற்றுச்சொல் மாடத்தில் இருந்தவன்

கைகளில் இருக்கும் சொற்களைப் பார்த்தான்

உறைந்து நின்றான்; முறைத்துப் பார்த்தான்

கைகளில் இருந்த சொற்கள் கீழே விழுந்தன

யார் யாரோ ஓடினார்கள், கூடினார்கள்

அடையாளம் தெரியாத சிலர் சுற்றி நின்றார்கள்

மூடு காலணி உதை ஒலிகளே எதிரொலித்தன

 

“தேசத் துரோகி”, “கொல் அவனை”

இந்த மாற்றுச்சொற்களே

பயத்தில் நான் உறைந்த பொழுதும்

நினைவு மங்கும் அந்த நேரத்தில்

தெளிவாகக் கேட்டன!

இரகீம் பொன்னாடு (மலையாளத்தில்)
இலக்குவனார் திருவள்ளுவன் (தமிழில்)