தலைப்பு-தாழ்த்தப்பட்ட தமிழினம், சச்சிதானந்தம் தெய்வசிகாமணி : thalaippu_thamizhinam_sachithanantham

தாழ்த்தப்பட்ட தமிழினம்!

உயர்ந்தவ ரென்றும், தாழ்ந்தவ ரென்றும்,

உனக்குள் பகைமையை ஊதி வளர்த்து,

இயன்ற வரையினில் திருடிப் பொருள்சேர்க்க,

இலக்குகள் வைத்துச் செயல்படும் கூட்டத்தை,

வியந்து பாராட்டி, வாய் உலரப் பேசி,

வறண்ட சுனைபோல வாடும் தமிழா!

பயந்து பயந்து நீ வாழ்ந்தது போதும்,

பணிந்து குனிந்து நெஞ்சம் பாழ்பட வேண்டா.

அயர்ந்து கண்தூங்கி அழிந்தது போதும்,

அடர்ந்த அமிலமாய்ப் பொங்கிட வேண்டும்!

இயங்கித் துணிவோடு களத்தில் நம்முடன்,

இறங்கிச் செயலாற்றி இன்னல் களைந்திட,

முயன்று முனைப்புடன் முன்வரும் ஒருவனை,

முதல்வன் ஆக்கினால் மாற்றம் காணலாம்!

மயங்கி இம்முறையும் மாயக் கவர்ச்சியில்,

முடங்கிப் புதைகுழியில் மீண்டும் விழுந்து,

தயங்கிக் குழம்பியே தவறுகள் செய்தால்,

தாழ்த்தப் பட்டிடும் தமிழினம் மேலும்!

சச்சிதானந்தம் தெய்வசிகாமணி