kadalil=pillaiyar

தொலைக் காட்சியில் கண்டேன் … நொந்தேன்…

கரைத்தாயிற்று கடலில்…
வேதிக் கலவைகளும் கலக்கின கடல்தனை!

தொந்தி உருண்டையை – ஏதோ
வெல்லக்கட்டியென நினைத்து
சுள்ளெனக் கடித்துத் தின்னவே
வந்தனவே மீன்கள்!

வேதிக் கலவையது – மீனின்
பேதியானது!
நோயின் வலையில் சிக்கி -பின்னர்
மீனவன் விரித்த வலையில் மாண்டனவே!

நோயுற்ற மீனை விலைக் கொடுத்துண்ட
மாந்தரும் சிக்கினரே நோய்தனில்!

அலைநீரில்
வாழும் மீனவர் வாழ்வதும்
பாழாகாதோ!
பாழும் வேதிக் கலவை – விநாயகன் உருவில்
ஆழ் கடல்தனில் கலந்திட்டால்?

சிந்திப்பாருண்டோ – சந்தி சிரிக்காதோ
தொந்திக் கரைசல் கண்டு!

மீனவனே – நீ
காணா தேனிருக்கிறாய் –
பாழாவது உன் வாழ்வடா!

வேதி உருண்டைதனை கரைப்பதெனில்
அவரவர் இல்லத்தில் கரைக்கட்டுமே!

ஆழ்கடல் தேடி வந்து
ஆங்கு வாழ் உயிர் கொல்வதோ – இது நெறியோ?
விளம்புவீர்!

 –அரங்க கனகராசன் கனகு