நடமாடுகின்றன தெய்வங்கள் மனித உருவில் 

காலன் வீசும்

பாசக்கயிற்றைக்

கத்தரிக்கோல் கொண்டு

கத்தரிக்க முயலும்

மருத்துவத்துறைக்கு

மனமார நன்றி!.

 

கூலிக்கு மாரடிக்கவில்லை

புரிகிறது…………கூலி

வாங்கிட இருப்போமா

தெரியவில்லை!?.

 

மயானம் நிரப்பும் போராட்டம்

தியானம் புரியும் கிருமிகள்

சயனம் மறந்த மருத்துவம்

சகலமும் கல்வி மகத்துவம்

 

நலவாழ்வுத்துறை

மட்டுமே சுழலச்,

சுருண்டு போயின

பல துறைகள்

 

எல்லாம் தனித்திருக்க

தன்னை யிழந்த மனிதனோ

படித்துறையில்

 

கடவுள் கல் எனப்

புரிகிறது! மனிதம்

புனிதம் ஆகிறது

 

நோயைத் தீர்க்க மருந்தில்லை

நோயாளிக்குக்

குறைவில்லை

 

சென்றவன் எல்லாம்

வந்து விட்டான்

செல்வமாய் நோயைக் கொண்டு விட்டான்

 

ஆலயங்கள் அடைக்கப்பட்டன

ஆயுளை நீட்டிக்க

மருத்துவமனையில்

மதங்களை மறந்து

மருத்துவர்களாய் தெய்வங்கள்!

 

ஆலயத்தில் இருந்த போது

மதங்களால் பிரிந்திருந்த தெய்வங்கள்

மருத்துவ மனையில் மதங்களைக் கடந்து

மனிதம் காக்கின்றன

 

இன்னல் எனும் போது தான்

எழுந்து நடமாடுகின்றன தெய்வங்கள்

மனித உருவில்

 

மருத்துவ மகத்துவம் தனித்துவம்

தனித்திருப்போம்

தழைத்திருப்போம்

 

மருத்துவர்களும் மனிதர்களே

கற்சிலைகள் அல்ல

கண்டும் காணாமல் கிடக்க

 

ஒத்துழைப்போம்.

ஒன்றுபட்டு ஒழிப்போம்

தொற்றுக் கிருமியை

அழிப்போம்!

ஆற்காடு க.குமரன்

9789814114