நரைமுடிக்குக் காரணம் ஆண்ட நம் மக்கள் அடிமைகளானமை! – சி.இலக்குவனார்
யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல்
யாங்கா கியர் என வினவுதி ராயின்?
ஆண்டநம் மக்கள் அடிமைக ளாயினர்;
பூண்டநம் பண்பு போலிய தாகின்று
நற்றமிழ் மறந்தனர்; நானில மதனில்
பிறமொழிப் பற்றில் பெரியோ ராயினர்;
தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை;
ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும்
அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்;
தமிழைக் கற்றோர் தாழ்நிலை உறுவதால்
தமிழைப் பயிலத் தமிழரே வந்திலர்;
ஆட்சி மொழியும் அன்னை மொழிஎனச்
சொல்லள வாக்கினர்; தூத்தமிழ் வெறுக்கும்
அயல்மொழிக் காதலர் ஆட்சி கொண்டுளர்;
உயர்கல் விக்குறு ஊடக மொழியாய்த்
தமிழ்மொழி அமையத் தடுப்பவர் தமிழரே!
ஆங்கில மொழிக்கே அளிப்பதில் பாதியும்
தமிழ்மொழிக் களித்திலர் தமிழைப் போற்றுவோர்;
அல்லவை பெருகவும் நல்லவை குறையவும்
மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிதான் இன்றே
– தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
Leave a Reply