நிலையில்லை எதுவும்…! அமுதா பொற்கொடி
நிலையில்லை எதுவும்…!
மணம்வீசும் மலர்கள் மாலையில் வாடும்
வனம்சூழும் குயிலோசை குரல்வளை ஓயும்
தனம்கோடி குபேரமும் தெருக்கோடி சேரும்
மனம்கூடிய பாசமும் பசபசப்பாய்ச் சோரும்
கட்டிய கோட்டைகள் தரைமட்டமாகும்
ஒட்டிய ஒட்டடைகள் ஒவ்வாமையாகும்
வாட்டிக் கூட்டி வகுத்த போகம்
வட்டியும் முதலுமாய்க் கைவிட்டுப் போகும்
ஆய்விழிப் பார்வை அந்தகம் ஆகும்
வாய்வழிப் புன்னகை உதட்டோடு குன்றும்
நோய்நொடி அகன்று நூறாண்டு கடந்தாலும்
மெய்வற்றி உலர்ந்து பாடையில் போகும்
நேற்றைய நிகழ்வுகள் இன்று புரையும்
இன்றைய நடப்புகள் நாளை திரையும்
முந்தை கடந்தவை காலத்தால் கரையும்
நாளை நடப்பது யாருக்குத் தெரியும்?
பூமிக்கு நாம்வந்த யாத்திரை பிறப்பு
முறையாய் முடிந்த பயணமே இறப்பு
உதிர உணர்வுகள் உறவுக்கு விருந்து
உதிர்ந்து மறைந்தால் மறதியே மருந்து
கண்ணில் பதிந்தது காற்றாய் கலந்தது
மண்ணில் உதித்தது மண்ணால் செமித்தது
படைத்ததோ வடித்ததோ பூமிக்குச் சொந்தமில்லை
பிறப்பு மரணமின்றி இயற்கையில் ஏதுமில்லை…!
– கவிதாயினி அமுதா பொற்கொடி
Leave a Reply