தலைப்பு-நீரோடு நிலம் காப்பவன் : thalaippu_nilamkaappavan

தமிழினத்தின் பொற்காலம்!

வாரங்கள் ஒன்றிரண்டு மட்டும் தான் உள்ளதடா,

ஊரெங்கும் பரப்புரை ஒளிவேகம் எடுக்குதடா,

கூரம்பாய் சிந்தனையை நீ கொஞ்சம் தீட்டிடடா,

பாரங்கள் தீர்ப்பவர்கள் யாரென்று தேர்ந்திடடா!

வீரங்கொண் டிதுவரையில் வசனங்கள் பேசியவர்,

கோரப்பல் சிரிப்பாலே கொடுங்கோலாய்ச் சீறியவர்,

வேரின்றி வீழ்கின்ற மரம்போலுன் காலடியில்,

பேரன்புச் சாயமிட்டு வீழ்வார்கள் புறந்தள்ளடா!

ஈரங்கொண் டுள்ளத்தில் எரிமலையாய் வெடிப்பவனை,

மாரெங்கும் தமிழனென்னும் பெருமிதத்தில் திளைப்பவனை,

பாரெங்கும் தமிழகத்தின் பெருமைகளை வளர்ப்பவனை,

நீரோடு நிலம் காக்கப் போராடும் நல்லவனை,

யாரென்ன சொன்னாலும் தடுமாற்றம் இல்லாமல்,

ஆராய்ந்து பார்த்தபின் ஆட்சியில் அமர்த்தினால்,

ஆரம்பம் ஆகுமே, தமிழினத்தின் பொற்காலம்!

சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

சச்சிதானந்தன் தெய்வசிகாமணி :saccithanantham deivasikamani