mullai nilavazhagan10

 (தை 18 2046 / பிப்பிரவரி 01, 2015 தொடர்ச்சி)

 

காட்சி – 10

 

அங்கம்    :     அன்பரசன், கவிஞர்

இடம்     :     வீட்டு முன்வாசல்

நிலைமை :     (சிற்றூர் வாழ்வை

அறியத் துடிக்கிறான்

அன்பு விராலியூர் சென்றதை

விரித்து சொல்கிறார் கவிஞர்)

அன்பு    :    அடுத்தவோர் காட்சி

                       தொடங்கும் முன்னே!

                     துடிக்குது நெஞ்சம்

                    ஒன்றினை அறிய!

                    நகரத்து வாழ்வை

                   அறியவே விரித்து

                  அகத்தில் நான் பதிய

                    அடுக்கியே வைத்தீர்!

                  சிற்றூர் வாழ்வை

                 அறியாத நெஞ்சப்

                   பாரத்தைக் கொஞ்சம்

                    இறக்கியே வைப்பீர்

கவி       :     சிற்றூர் வாழ்வை அறியவே மதுரை

விராலியூர் சென்றேன்! உந்தவே ஆவல்!

காதமோ பலவாய்க் காடுகள் கடக்கப்

பாதத்தில் முட்கள் பதிந்ததைப் பார்!

ஊருக்கு மதிலாய் கற்றாழை கள்ளி

பேருக்கு ஒவ்வோர் புளிய மரங்கள்

ஆங்கொன்று இங்காய் தூங்குதல் போல

ஏங்கியே நிற்கும் எண்ணற்ற குடிசை!

கந்தலோ துணியோ தொங்க இருபக்கம்

சொந்தமே கோவணத்துணியென்ற நினைவில்

 

எண்ணற்ற சிறுசுகள் நிற்பதோடல்ல

கணக்கற்ற குஞ்சுக்கு அதுவும் இல்லை!

என்னையே மறந்தேன்! நினைவையே இழந்தேன்

எனக்கது நெஞ்சக் குத்தலே! என்பேன்!

செந்நிற முடியில் செழுமண் தூசும்

நொந்த உடலில் சொறியும் சிரங்கும்

ஒட்டிய இடையில் கட்டிய கயிறும்

கட்டிய கயிற்றில் கால் முழத்துணியும்

இமைகள் விரிக்க இயலா வண்ணம்

அமைந்த பூளை வழியும் விழியும்

வாயென ஒன்றில் வழி நீர் புண்ணும்

நோயென்னும் பசியால் வாடிடும் உருவாய்

எல்லோரும் இந்திய மன்னர்களென்ற

செல்வங்களாங்கே வாயில்லா இனம் போல்

மெல்லவே எங்கும் திரிவதைக் கண்டேன்

சொல்லால் எதனை இணையெனச் சொல்வேன்!

ஊரின் கிழக்கே ஊருணி உண்டு!

பாரினில் இதுவே பாழும் குளமாம்!

மாடுகள்! எருமைகள்! கோழிகள்! குஞ்சுகள்!

ஆடுகள்! நாய்கள்! அனைத்து உயிர்கள்

குளித்திட! குடித்திட! கும்மாளம் போட்டிட

அளிப்பது அந்தக் குளமேயாகும்!

ஊருணி நீரோ சிறுவர்க்கு, நல்ல

பேருபகாரியாம்! மகிழ்ந்திட ஆங்கே!

எருமைகள் இன்பம் காண்பதும் அதிலே!

கரும்பன்றிக் குடும்பம் நடத்தலும் அதிலே!

நாற்றிட்ட நங்கை நாயாய் அலைந்தாள்!

ஏற்றிடக்குடிலில் இருளையே போக்க!

ஆண்டைகள் அதட்ட! அடிவயிறு கலங்க

ஆண்டவன் எண்ணி அழுத்தியே நடந்து,

பேயென அலைய இதயமே நொறுங்கி

நாயெனப் படுத்தாள் நலிந்ததோர்க்குடிலில்!

நாயொன்று படுக்கக் குட்டிகள் ஆங்கே;

வாயதில் வைக்க துடிப்பதைப் போல!

தாயென்று தடவி தட்டியேப் பார்த்து!

சேய்களோ மெல்லத் தேம்பிய படியே!

ஒன்றோடொன்று உரசிய பின்பு!

ஒன்றுமே இல்லா ஒன்றெனக்கண்டு!

ஒன்றின்மேல் ஒன்று ஒன்றெனப்படுத்து!

ஒன்றுக்கும் கீழே உறவெனப்படுத்து!

அன்பு     :     ஐயய்யோ! ஐயா! போதுமே ஐயா!

மெய்யும் சிலிர்த்துப் போனதே! ஐயா!

சீரில்லையெனினும் சிற்றூர் வாழ்வு!

சீரழிந்திருக்க வேண்டவே வேண்டாம்!

கவி       :     உழுபவர்க்கங்கே நிலமில்லை தம்பி! ஊர்

விழுங்குவோர்க்கு நிலமோ அளவில்லை தம்பி!

துன்பத்தை அவர்கள் சொல்வதே இல்லை! உழவர்

கண்ணீராய் அதனைச் சொல்லவே கண்டேன்!

சொல்லாகச் சொல்ல கண்ணீரே விட்டால்;

எல்லையும் உண்டோ காட்சியைக் கண்டால்?

அன்ப     :     உழுத குழியினிலே, பசியால்

மடிந்தே வீழ்வதுதான்

உழவன் தலைஎழுத்தா? இந்த

நாடும் தரும் பரிசா?

கவி       :     நிலமெல்லாம் சமமாய்ப் பங்கீடுசெய்து

உழவனை மதித்து அளித்திடும் அரசாய்

நிலைபெறச் செய்ய நிலைத்திடும் வாழ்வு

கலக்கமே வேண்டா, கவலையை விடு நீ!

அன்ப     :     வயலெல்லாம் பண்ணையார்

வயிற்றினிலன்றோ?

கவி       :     பசியால் ஆயிரம் சாவதை விடவோர்

புசியெனப் பண்ணையைப் பட்டெனச் சுட்டு

ககிக்கின்ற ஏழைகள் கண்ணீரைத் துடைத்தல்

கசடல்லத் தம்பி கடமையே ஆகும்!

அன்ப     :     அரசு ஆவன செய்யாது! வெறும்

மரமென நிற்குமேயானால்

கவி       :   ஏர்பிடிக்கும் உழவரெல்லாம்

ஊர் அனைத்தும் ஒன்று கூடி

ஊர்ப் பண்ணை அழித்து சம

கூறுபோட எண்ணிவிட்டால்

ஓர் நொடிப் போதாதோ?

யார் தடுத்தும் கேட்பாரோ?

பார் முழுக்க ஏர்க் கொடியை

பாரென்றே உரைப்பாரே!

 

(காட்சி முடிவு)

 

(பாடும்)

 

two-sparrows10