பாளமாய் ஆனதே நேபாளம்! – உருத்ரா
மலை மடிப்புக்குள்ளிருந்தும்
மண் பாம்பின் சீற்றமா?
பாளம் பாளமாய் ஆனதே
நேபாளம்.
நசுங்கிய உடல்கள்
திண்காரைப் பிணங்களாய்
என்னே அவலம்!.
செங்கல் நொறுங்கிய குவியல்களில்
தொன்மைப்படிவங்களும்
தொலைந்து கிடக்கின்றன.
குரல்கள் அவிழ்க்கும் முன்
உயிர்ப்பூக்கள் கூழாய்ப்போயின.
ஊழிக்கூத்தின் உடுக்கைகள்
கோவில்களில்
அதிர்ந்து காட்டிய போதெலாம்
கண்களில் ஒற்றிக்கொண்டோமே
ஒத்திகை தான் அது என
இன்று காட்டினானோ அந்த சிவன்.
எண்ணிக்கை தெரியாத குற்றமல்ல.
கிடைக்கின்ற கைகளும் கால்களும்
முழுக்கணக்கு காட்டும்போது நம்
மூச்சடங்கி அல்லவா போகிறது
பெரும் அதிர்ச்சியில்.
அந்த மக்களுக்கு
நாம் தோள் கொடுப்போம்.
அவர்கள் துவண்டு போகாமல் இருக்க
நம் இதயங்களால்
அவர்கள் கண்ணீரை ஒற்றி யெடுப்போம்.
துன்பத்துக்கும் கூட
எவரெசுட்டு சிகரம் அங்கு உண்டு
என்று சொன்னதோ இந்த நில நடுக்கம்.
கடவுளின் குழந்தை
கிலு கிலுப்பையை
நேபாளத்தில் வீசி எறிந்து
விளையாடியதில்
வீணாய் எத்தனை எத்தனை உயிர்கள்
சிதறி நொறுங்கின!
நம் உதவிகள் குவியட்டும்.!
மீட்பு பணியும் தொடரட்டும்!
Leave a Reply