(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 16-20 தொடர்ச்சி)

இராவண காவியம்

1. தமிழகக் காண்டம்

2. தமிழகப் படலம்

திராவிடம்

21.அந்நகரம் பஃறுளியாற் றங்கரையி லுலகிலுள்ள

எந்நகரு மிந்நகருக் கிணையாகா தெனும்படிக்குத்

தன்னிகராந் தமிழ்வளர்க்குந் தலைக்கழக மோடுதமிழ்

மன்னர்களும் புலவர்களும் வாழ்நிலையா விருந்ததுவே,

 

திராவிடம்

22.அந்நாட்டின் வடக்காவா னணிவிந்த மதன்றெற்கா

நன்னாட்டின் முன்னாட்டு நாடாநன் னலங்காட்டும்

பன்னாட்டு முன்னீட்டும் பயன்காட்டும் படியமைந்த

தென்னாட்டின் வடகாடாந் திருநாடு திகழ்ந்ததுவால்,

23.மலைப்பிறந்து கற்றவழ்ந்து மலைச்சாரல் வழிநடந்தே

இலைப்பரந்த நறுமுல்லை எதிர்கானத் திடைவளர்ந்து

தலைப்பிறந்த வளமருதந் தனைமருவிப் பயனுதவி

அலைப்புகுந்து நலம்புரியு மாறென்ப ரவ்வாறே.

24.வடவரையு மிடைவரையும் வானளவுங் குடவரையும்

மிடைவரையா தெழுகோதா விரிகாரி பெண்பாலி

தடவரைகா விரிவானி தமிழ்வையை பொருனைமுதல்

நடைவரையா வாறுகளால் நல்வளத்த திருநாடு.

25.மலைவளமுங் கான்வளமும் மருதவயற் பெருவளமும்

அலைவளமுந் தலைமயங்கி யறாவளமா வமைந்ததொடு

நிலவளநீர் வளமெல்லாம் நிலைவளமா நிலவியதால்

இலகுதிரா விடமெனப்பே ரேற்றதுவா லிந்நாடே

+++

  1. மிடை தல்-நிறைதல். வரைதல்-நீக்கல். கீர்ரி–

கிருட்டிணா, பெண்- பெண்ணையாறு. நீரைவரையா.

வற்றா. 25. திரு ஆ இடம்-செல்வம் பொருந்திய

இடம். திரு-செல்வம், ஆ-ஆகும், ஆதல்.

+++

தொடரும்

இராவண காவியம்

புலவர் குழந்தை