(இராவண காவியம்: 1.7.1-1.7.5. தொடர்ச்சி)

இராவண காவியம்

1. தமிழகக் காண்டம்

7. கடல்கோட் படலம்

6.      பொருவள மின்றியே புகல டைந்தெனப்

               பெருவள மிக்கதன் பெயரின் மேம்படும்

               ஒருவள நாட்டினை யுண்டு வந்திடத்

               திருவுளங் கொண்டதத் தீய வாழியும்.

        7.      அவ்வள நாட்டினும் அரிய தாகவே

               குவ்வளத் தமிழர்கள் கொண்டு போற்றிடும்

               இவ்வுல கத்திலா வினிமை மிக்கிடும்

               செவ்விய தமிழுணத் தேர்ந்த வக்கடல்.

        8.      இனிமையி னுருவினள் இயற்கை வாழ்வினள்

               தனிமையி னுலவிடுந் தமிழத் தாயின்வாய்க்

               கனிமொழி யினிமையைக் கருத்துட் கேட்டுமே

               நனியுளங் களித்திட நயந்த வேலையும்.

        9.      இனித்திடும் பொருளினை எவரும் உண்டிட

               மனத்திடை விரும்புதல் வழக்க மாதலான்

               தனித்தினித் திடும்பழந் தமிழை யுண்டிடக்

               கனைக்கடல் விரும்புதல் கடமை யல்லவோ.

அறுசீர் விருத்தம்

        10.     தனித்தனி சொல்லி னின்பந் தளைபடத் தொடரி னின்பம்

               நுனிப்பொருள் காணி னின்பம் நுணுகியுண் ணோக்கி னின்பம்

               நினைத்தொறு நெஞ்சுக் கின்பம் நேர்தனித் தமிழே நீதான்

               அனைத்துமே யின்ப மானா லவாவுறார் யார்தான் சொல்லாய்.

(தொடரும்)

இராவண காவியம் – புலவர் குழந்தை

குறிப்பு : 7. குவை வளம் – குவ்வளம்; தொகுத்தல். குவை – மிக்க. 8. வேலை – கடல்.