(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 21-25 தொடர்ச்சி)

இராவண காவியம்: பாயிரம் 26-30

 

26. மனையறத்தின் வகையமை காதலர்

தனை நிகர்த்தவர் தம்மைத் தெரிவுறத்

தினைநி கர்த்தள வேனுஞ் செயும்பயன்

பனைநி கர்த்தவின் பத்தினைப் போற்றுவாம்.

 

அவை யடக்கம்

27. ஏசு வார்சிலர்; ஈதுண்மை யேயெனப்

பேசு வார்சிலர்; பேச வெதிர்மனங்

கூசு வார்சிலர்; கூக்குர லார்சிலர்;

மாசி லாத்தமிழ் மாக்கதை கேட்கினே.

28. வழியெ தென்னும்; வரன்முறை மாற்றிய

பழிய தென்னும்; பகைகொ டுரைவசை

மொழிய தென்னு; முறைமை யிலாதவிஃ

தொழிய வென்னு; மொழிப்பநா மென்னுமே.

29. வடக்கி ருந்திங்கு வந்த கதையினைக்

கிடக்கை மாற்றிக் கிளந்து வடக்குற

நடக்கை யாக்கிய தன்றி யிதிற்புலப்

படக்கி டந்ததீ தொன்றிலைப் பார்க்கினே.

30. பொய்வித் தான புரட்டொடு பூரியத்

தெய்வத் தன்மைத் திருட்டை யகற்றியே

மெய்வித் திட்டு விளைவின் பயன்கொள

உய்வித் தேமலா னொன்றும்வே றின்றிதே.

தொடரும்

இராவண காவியம்

புலவர் குழந்தை