(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.31-1.7.35 தொடர்ச்சி)

இராவண காவியம்

1.       தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம்

        36.     தந்துவைத்த வொருபொருளைத் தான்கொள்ளு மாறேபோல்

               வந்தடுத்துத் தீயாழி வாய்க்கொண்டு போயதன்பின்

               இந்திரத்தை யினிதாண்டன் றிருந்தபெருந் தமிழ்ச்சோழன்

               செந்தமிழின் மணங்கமழுந் திராவிடம்புக் கிருந்தனனே.

        37.     பூண்டசுவை யதுகண்ட பூனையுறி யுறிதாகத்

               தாண்டுமெனு முதுமொழியோற் றமிழ்சுவைத்த பாழ்ங்கடலும்

               ஆண்டெழுநூ றதன்முன்ன ரரைகுறையா வுள்ளதுங்கொண்

               டீண்டுள்ள வளவினநாட் டிடஞ்சுருங்கச் செய்ததுவே.

   38.     எத்தனையோ வகப்பொருணூ லெத்தனையோ புறப்பொருணூல்

               எத்தனையோ விசைத்தமிழ்நூ லெத்தனையோ கூத்தியனூல்

               எத்தனையோ விலக்கியநூ லெத்தனையோ விலக்கணநூல்

               அத்தனையுங் கொள்கடனீ யறிவுபெறாக் கழிமடமேன்.

        39.    மணிமலையெங் கேகுமரி மலையொடுபன் மலையெங்கே

               அணிமிகுபஃ றுளிகுமரி யாறெங்கே யவ்வாற்றால்

               பணிபறியாப் பெருவளந்தென் பாலியொடிந் திரமெங்கே

               உணியெனவே யுறிஞ்சியநீ ஓகெடுவாய் கொடுங்கடலே.

        40.    அதன்பின்ன ரேவையை யாற்றினது கரையுடைய

               புதுமதுரை யதுகண்டு புகழ்பூத்தார் பாண்டியர்கள்

               இதுவாக உறந்தையுட னெழில்பூத்த பூம்புகார்

               அதுவாகத் தமிழ்வளர்த்தே அரசிருந்தார் புகழ்ச்சோழர்.

        41.     பின்னரும் தீயாழி பெருவயிறு நிரம்பாது

               மன்னியசீர்க் கடைக்கழக காலத்தே வாய்வைத்துப்

               பொன்னலரும் புன்னையங்காப் புகார்முதலா கியவுண்டே

               இந்நிலைமை யாக்கியதா லினும்பசிதீர்ந் திவேயோ.

+++++++

37. முன் – தி.மு.

+++++++

(தொடரும்)
இராவண காவியம் – புலவர் குழந்தை