(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 31-37 தொடர்ச்சி)

இராவண காவியம்

1. தமிழகக் காண்டம்

2. தமிழகப் படலம்

 

வேறு

1. தெண்டிரை மூன்று திசையுனுங் காப்ப

வண்டமிழ் விந்த மலைவடக் கார்ப்பப்

பண்டுந முன்னர் பயன்பட வாழ்ந்த

தண்டமிழ் வேலித் தமிழகங் காண்பாம்.

 

2. நனிமிகு பண்டுநர் நற்றமிழ்ச் செல்வி

பனிமலை காறு. பகைசிறி தின்றி

இனிதுயர் வெண் குடை நீழ லிருந்து

தனியர சோச்சித் தமிழகங் காத்தாள்.

 

3. சீரியல் வாய்ந்த செழுந்தமி ழன்னை

மாரி வழங்கும் வடதலை நாட்டை

ஆரிய ரென்னு மயலவர் தங்கள்

பேரறி யாத பெருமையி னாண்டாள்.

 

4. விந்த வடக்கு விளங்கி யிருந்த

நந்தமிழ் மக்கணன் னாகரி கத்தைச்

சிந்து வெளிப்புறத் தேறி யறிந்தார்

சிந்தை மகிழ்ந்து செருக்குற நாமே.

5. சிந்துவி னொன்றோ திசையிசை மேய

அந்தநன் னாட்டி னகன்றதன் மேற்கில்

நந்திய வாணிக நாடிருப் பாக

வந்தனர் வாழ்ந்து மணித்தமிழ் மக்கள்.

தொடரும்

இராவண காவியம்

புலவர் குழந்தை

++

5. நந்திய- தழைத்த. வாணிக நாடு-யவன நாடு.

++