thaipongal02

பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்

தங்கத் தமிழ்போல் தழைத்து!

 

பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள்

திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

 

பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய்

உங்கள் மனமும் ஒளிர்ந்து!

 

பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை

எங்கும் இனிமை இசைத்து!

 

பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்

சங்கத் தமிழாய்ச் சமைத்து!

 

பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!

கங்குல் நிலையைக் கழித்து!

 

பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!

எங்கும் பொதுமை இசைத்து!

 

பொங்கல் திருநாள்  புதுக்கட்டும் சாதிமதம்
தொங்கும் உலகைத் துடைத்து!

 

பொங்கல் திருநாள் புகுத்தட்டும் வாய்மறையை!

தங்கும் அறங்கள் தழைத்து!

 

பொங்கல் திருநாள் புசிக்கட்டும் சீா்கம்பன்

செங்கனித் தோப்பில் திரிந்து!

 

கி.பாரதிதாசன்

– கவிஞர் கி.பாரதிதாசன்,

தலைவர், கம்பன்கழகம், பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.in/2014/01/2045.html