மலர்க்கொடிஅன்னையின் மலரடிபோற்றி!
மலர்க்கொடி அன்னையின் மலரடி போற்றி!
யார்அர செனினும் தமிழ்க்குக் கேடெனில்
போர்முர சார்த்த வீறுடை மறவர்
இலக்குவனாரின் இனிய துணையாய்
செருக்களம் நோக்கிச் செல்கென விடுத்த
தருக்குடை மறத்தி;தமிழ்நலன் காக்கும்
விருப்புடன் துணைவர் சிறைக்களம் புகினும்
பொறுப்புடன் மக்கள் சுற்றம் காத்திடும்
பெருந்துணை நல்லாள்; இல்லம் ஏகிய
மறைமலை அடிகளும் திருக்குறளாரும்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. அவர்களும்
வள்ளுவர் காட்டிய வாழ்க்கைத் துணையாய்
விருந்து பேணிடும் குறள்நெறிச் செம்மல்
என்று பாராட்டிய ஏந்திசை நல்லாள்;
கலக்கம் நீக்கிக் கனிவைப் பொழிந்து
இலக்குவர் போற்றிய இனிய தமிழ்த்தாய்
மலர்க்கொடி அன்னையின் மலரடி போற்றி!
தம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் போராட்டமே உயிர்த்துடிப்பாக வாழ்ந்த தமிழ்க்காப்புப் போராளிக்குத் தக்க துணையாக விளங்கிய அந்தப் பெருந்தகையாட்டிக்குப் புகழ் வணக்கம் செலுத்துவது அவருடைய பிள்ளைகளுக்கு மட்டுமன்று; தமிழர் அனைவருக்குமே உரிய கடமையாகும்.
– முனைவர் இ.மறைமலை,
குறள்நெறி, பங்குனி 19, 2055 / ஏப்பிரல் 01, 2024, மலர்க்கொடி இலக்குவனார் நூற்றாண்டு (6.04.1924-14.12.1988) நிறைவுச் சிறப்பிதழ்
மலர்க்கொடி அம்மையாரின் மலரடிக்கு என் பணிவன்பான புகழ் வணக்கமும் உரித்தாகுக!