தலைப்பு-மொழியே விழி-கவினப்பன்தமிழன் : thalaippu_mozhiyevizhi_kavinappan

மொழியே விழி!

 

மொழியென்ப மாந்தர்கட் கெல்லாங் கரவா

விழியென்று கொள்ளப் படும்.

 

மறைக்காத பார்வையைப் போன்றதாயின், அது மாந்த இனத்தவருக்கு மொழியாம் என்க.

 

உடம்பை யியக்கு முயிர்போல மாந்த

ருணர்வை யியக்கு மொழி.

 

உயிரானது உடம்பை இயக்குவது போன்று, மொழியானது மாந்தரின் உணர்வை இயக்குவதாகும்.

 

உணர்வேத்தி யுள்ளந் துலக்கி யொழுங்கிற்

கணைகாத்தே யாற்று மொழி.

 

உணர்வை ஏற்றி, உள்ளத்தைத் துலக்கி, ஒழுங்கிற்குக் காவலாய் அமையும் ஒழுக்கமே மொழி.

 

குழியொக்குங் கொள்ளுநீர் குன்று விளக்கம்

மொழியொக்குங் கொள்ளலாகு மாண்பு.

 

குழியின் ஆழத்து அளவே கொள்ளும் நீரின் அளவு; குன்றின் உயரத்தின் அளவே விளக்கத்தின் வீச்சின் அளவு; அதுபோல், மொழியின் அளவே, மாந்தர் கொள்ளக் கூடிய மாண்பு.

 

பற்றது பற்று மரபு மொழியினையே

விட்டது விட்ட தொடர்பு.

 

மொழியைப் பற்றினால் மரபைப் பற்றுவோம். மொழியை விட்டுவிட்டால், முன்னோர் விடுத்து வைத்த மரபை விட்டுவிடுவோம்.

 

இறந்த கணங்காட்டு மீன்போல் மரபின்

சிறந்தது காட்டும் மொழி.

 

பல்லாயிரககணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை, இக்காலத்துக் காட்டி நிற்கும் விண்மீனைப் போல, பல்லாயிரமாண்டுகளாகப் பேணப்பட்டு வரும், இனத்து மரபின் சிறந்தவற்றை, மொழி காட்டி நிற்கும்.

 

உண்ட வனைத்தின் உருநிலன் உள்ளுரமாய்க்

கொண்டார் பெருமை மொழி.

 

நிலமானது, தான் உண்ட அனைத்தின் உருவாகும். மொழியானது தான் கண்ட சான்றோர்களின் தொகுதியாகும்.

 

காலத்தைக் காலத்துங் காத்தளிக்கக் காலத்தான்

காலத்துங் காத்த மொழி.

 

இனத்து மரபைக், காலத்தும் அழியாமல் நமக்குத் தருவதற்கு, காலத்தால், அம்மரபு காலத்தும் காக்கப்பட்டுத் தரப்படும் வழியே மொழி.

 

தலையி னிழிந்த மயிரனையர் தாந்தம்

மொழியின் இழிந்த கடை

தலையிலிருந்து பிரிந்த மயிரைப் போன்ற இழிநிலையே, தம் தாய்மொழியே விட்டுப் பிரிந்தார் நிலை என்றவாறு…

 

தனதய லாகும் தனக்கொவ்வா தெல்லாம்

தனதாகும் தாய்மொழியின் றேல்.

 

தாய்மொழிப் பற்று இல்லையென்றால், தன்னினத்து மரபுகள் எல்லாம் அயன்மையாகவும், வேற்றாரின் மரபுகள் எல்லாம் தனதாகவும், தோன்றிக் கெடுக்கும்.

 

சிறுமையிற் காண்பார் பெருமை மொழியின்

பெருமைதாங் காணா தவர்.

 

தம் மொழியின் பெருமைகளைக் காணாதவர், வேற்றுச் சிறுமைகளில் எல்லாம் பெருமை கண்டு நின்று, இழிவார்.

 

தம்மொழிப் பற்றி னளவே யினனாட்டுப்

பற்றெலாம் பற்றுந் திறன்.

 

இனப்பற்றும், நாட்டுப்பற்றும், தன் தாய்மொழி மீதான மொழிப்பற்றின் அளவினவே.

 

உள்ளத்தே தன்மொழி யோம்பானை யப்பெருங்

குள்ளமே கொன்று விடும்.

தன் தாய்மொழிக்கு உரிய மாண்பைத் தன் உள்ளத்தே கொள்ளாது, தாழ்வுணர்வோடு இருக்கும் ஒருவனை, அத்தாழ்வுணர்வே அழித்து விடும்.

 

புறப்பா டகத்துக்கில் லாயின் திறப்பாட்டால்

எந்த பயனும் இல.

.

புறத்தே நிகழ்த்தப்படும் செயற்பாடுகள், அகத்தை மேம்படுத்திடவே இருக்கவேண்டும். அவ்வாறு இல்லையென்றால், அச்செயற்பாடுகளில் எவ்வளவு திறமை கொண்டவராக இருந்தாலும், அதனால் அவர் பிறந்த குமுகத்திற்கு எந்த பயனும் இருக்காது.

 

பேராகி நாறாகித் தாராக யாத்தொழுக்கு

நாராகு மாறு மொழி.

 

அடையாளமாகி, பண்பாகி, இனமாகச் சேர்த்து ஒழுக்கும் ஒழுக்கம், மொழி.

 

காக்க மொழியை யதுகாக்குங் காவாக்கால்

யாக்கு நிலைக்கும் இனம்.

மொழியைக் காத்திட்டால் அது இனத்தைக் காக்கும். இல்லையாயின் இனம் நிலைக்க வழியில்லை.

நாடென்னும் கோட்டி னிருத்தி யினமென்னும்

பீடு பெருவி மொழி

 

நாடென்னும் அமைவுக்குள் ஆக்கி இனமென்னும் பெருமையை மாந்தருக்குத் தருவிப்பது மொழி.

 

மொழியா மிணைக்குங் கருவி யிழைத்திணைத்த

நன்னிலப் பெற்றியே நாடு

 

மொழி என்பது மாந்தரை இணைக்கும் கருவியே! பிரிக்குங் கருவியன்று. அவ்வாறான கருவியால் இழைத்து இணைக்கப்பெற்ற நல்ல நிலத்தின் தொகையே நாடு எனப்படுவதாகும்.

மொழியா லமைவதே நாடுமற் றெல்லாம்

அழிக்க வடைந்த சிறை

 

நாடு என்பது மொழியால் அமைவதே. அவ்வாறின்றி அமைக்கப்பட்டுள்ள நாடு எல்லாம், அந்நாட்டு மக்களை அழிக்க அடைத்து வைத்துள்ள சிறையே.

 

அகர முதல வெழுத்தெல்லா மாதித்

தமிழே முதற்றாய் மொழி.

 

எல்லா மொழிகளின் எழுத்துகளுக்கும், அகரமே முதன்மையானது. இவ்வுண்மையால் முன்தோன்றி மூத்த தமிழே உலகத்து முதல் தாய்மொழி என்ற உண்மை உறுதிப்படுகிறது என்றவாறு.

கவினப்பன் தமிழன்

– முத்தமிழ் மாமன்ற முகநூல் குழு