வாழ்க தமிழ் பேசுவோர்..
– வித்யாசாகர்
‘வாட்ச் பக்கெட் தேங்க்சு சாரி’யிலிருந்து
தொடங்குகிறது தமிழிற்கான நாள்கொலை..
அம்மா அப்பா மாறி
‘மம்மி டாடி’யானது மட்டுமல்ல
‘டிவி ரேடியோ’ கூட வெகுவாய்
தமிழைத் தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது;
சுடுகாட்டுப் பிணத்தைக் கூட
‘டெட்பாடி’ ஆக்கும் ஆசையை
எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால்
என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க
தமிழாகித் தொலையுமோ… (?)
எவனோ எடுத்தெமைப்
புதைக்கும் குழிக்குள்
தமிழ்தொலைத்து தொலைத்து
விழும் மாந்தரை
எந்த மொழி மனிதரெனயெண்ணி
மீண்டும் மீண்டும் மன்னிக்குமோ?
‘பேன்ட் சூட்டும் ஃபாரின் காரும்
பேஸ்புக் பிசாவும்’ கூட
மாற்றத்தின் புள்ளிகளுக்குள் அடங்கிய
காலமாற்றத்தின் காட்சிகளாகிப் போகட்டும்
பெயர்ச்சொல்லாய் வாழட்டும்
மீறி மொழியைத் தொலைப்பதையோ – பாதி குறைத்து
தங்க்லிசு எழுதுவதையோ
நியாயமென்றுரைப்போர் நஞ்சினை –
எந்த வாளிட்டு அறுப்பது?
ஆங்கிலம் முதன்மை
அரபுமொழி முதன்மை
அயல் மொழிகள் முதன்மை
அதையதை அதுவாகப் பேசுவதுபோல்
தாய்மொழியும்
தமிழர்க்கு அழகில்லையா?
மானம் போயின் தெருவில் பிணமான
இனத்திற்கு
தனதானமொழி தமிழது முகம் தொலைக்குமெனில்
சினமின்றி எழுதும் கவிதையும் தீதன்றோ?
எனவே –
எனவே உறவுகளே..
அங்கமங்கமாக பிறமொழி கலந்து குழந்தைக்கு
‘மில்க்கோடு’ ‘ஃஆட்கப்பில்’ தருவோரே,
தமிழைத் தினம் தினம் ‘பிளேட்டில்
ரைசோடு’ போட்டுக் கொல்வோரே..
இனிக் –
கொஞ்சம் கொஞ்சமாக இதனை மாற்றுங்கள்
தமிழையினி யேனும்
அழகு கொஞ்சப் பேசுங்கள்;
மொழி நமக்கு உயிராக வேண்டா
மொழியாகவே இருக்கட்டும்
முழுதாகப் பேசமட்டும் முப்பொழுதும் கிடைக்கட்டும்
வாழ்க தமிழ் பேசுவோர்!!
தமிழ் பேசுவோரைக் காணவில்லை. தமிழ் பேசுவோரை வாழ்த்துவது சிறப்பே. கவிஞர் வித்யாசாகருடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்!
பிறர் வாழ்த்தைப் பெறும் வகையில் தமிழிலேயே பேசுவோம்!