attai-thanipaasurathokuthiவியத்தகு மில்லறம்

விழுப்பஞ் சான்ற வியத்தகு மில்லறம்

ஒழுக்க வியலறி வறுத்துஞ் சாலையாய்

நன்மை தழைத்து ஞயக்கொடை நிழற்றி

மென்மை யரும்பி மேன்மை மலர்ந்துபே

ரன்பு காய்த்துநல் லருள்கனிந் தலகிலா

இன்பநறை பிலிற்று மினியகற் பகமாப்

இலகிடு முண்மை மலையிலக் கன்றே

ஏத்துறுந் தகைய இல்லற மெனுமிம்

மாத்துடந் தேரினை வாழ்க்கையாம் போர்க்களஞ்

செலுத்தபு துன்பந் தீயரை யெறிந்து

தொலைத்திட லறியார் துறவு துறவென

நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து

மயக்கினு மாழ்கலீல் மாந்தர்கள்!

உயக்கமின் றில்லற முற்றுமெய் யுணர்மினோ,

– – பரிதிமாற்கலைஞர் : தனிப்பாசுரத்தொகை