வியர்வையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

வியர்வையே!
வியர்வையே வியர்வையே உனக்கிது முறையோ
அயர்விலா துழைப்போன்உடலில் பிறப்பாய்
உள்ளத்தில் சிறிதும் நன்றியை எண்ணாய்
கள்ளமாய் ஏய்ப்போன் பேழையைச் சேர்வாய்
காலமும் மாறும் கோலமும் மாறும்
ஞாலமும் நம்மை வளமாய்க் காணும்
நாளும் உழைப்போம் மேலும் உயர்வோம்
வாழும் உலகில் வளத்தைக் காண்போம்
என்பன நினைக்கும் ஏழையை ஏய்ப்பாய்
உண்பதைப் பறிப்பாய் உடுப்பதைக் களைவாய்
வியர்வை என்னும விலையை வினவும்
அயர்வை அறியா முதலையை வளர்ப்பாய்
கொழுக்கக் கொழுக்கச் செழித்திடச் செய்வாய்
கருவைத் தந்தோன் கருகிச் சாகிட
உருவைக்காணான் பெருகி உயர்ந்திட
உதவும் வியர்வையே உனக்கிது முறையோ
உரைப்பாய் சிறிதும் நாணிடாமலே!
இலக்குவனார் திருவள்ளுவன்(1970)

Leave a Reply