வேட்பாளர் மாண்பு – முனைவர் க.தமிழமல்லன்
வேட்பாளர் மாண்பு
தலைவர்:
தகுதி என்ன? தலைமைக் கெவ்வளவு
மிகுதியாய் நன்கொடை மேல்நீ தருவாய்?
வேட்பாளர்:
அம்மா வுக்கொன் றளித்துச் சின்ன
அம்மா வுக்கும் அளித்து விட்டேன்!
அடுத்தத் தலைவர்க் களிக்கும் பெட்டியும்
அண்ணிக் கொன்றும் அணியம் ஐயா!
தலைவர்:
உன்றன் தாய்மொழி என்னவோ உரைப்பாய்?
வேட்பாளர்:
அன்புத் தமிழ்தான் அகத்தில் வேறு!
தலைவர்:
தமிழெனச் சொல்லு தமிழெனச் சொல்லு!
வேட்பா-
தமிழ்தான் தமிழ்தான் தாய்மொழி எனக்கு!
தலைவர்:
தொகுதி மதிப்பு மிகுதியாய் உண்டா?
வேட்பாளர்:
தொகுதி முழுவதும் மிகுதியாய் உள்ளவர்,
நம்சாதி மக்கள்! நம்புவர் என்னை!
தெம்பாய்ச் சொல்வேன் தெளிந்தமெய் ஐயா!
தலைவர்:
ஓகோ ஓகோ உண்மையைச் சொன்னாய்!
வாகை கெடுக்கும் பகைவர் உண்டா?
வேட்பாளர்:
பக்கத்து வீட்டுப் பாவை என்னுடன்
படுத்துப் போனாள் பார்த்த மனைவியோ,
பகையாய் மாறிப் பழிசெய் கின்றாள்!
மிகையாய் எண்ணல் வேண்டா ஐயா!
தலைவர்
மனைவியைப் பகைத்தால் மாட்சி ஏதடா?
துணையாய் மாற்றத் துணிக!
வேட்பாளர்:
ஐயா
இல்லா தொழிக்க என்னால் முடியும்!
இல்லக் குழப்பம் என்னைத் தொளைக்கும்!
தலைவர்:
வழக்கு கிழக்கு வம்பு தும்பு
வகையாய் இருந்தால் வரிசைப் படுத்து!
வேட்பாளர்:
மணலைக் கொள்ளை கொண்ட வழக்கு,
மனைகைப் பற்றி மதித்த வழக்கு,
சிற்சில கோடி பெற்றேன் கடனாய்க்
கற்க வில்லை கடன்அடை வழக்கம்!
வழக்கைப் போட்டு வம்படிக் கின்றனர்!
கிழக்குத் தோப்பில் கிளர்மது காய்ச்சித்
தொண்டர்க் களித்தேன்! தோல்வி மறைந்தது!
வண்டியாய்க் கையூட்டு வாங்கி யவர்தான்,
வழக்கில் சிக்க வைத்து விட்டார்!
வழக்கைச் சிறப்பாய் இழுக்கின் றேனே!
-முனைவர் க.தமிழமல்லன்
Leave a Reply