வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 4. மெய்யைத் தொழுதல்
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம்
மெய்யறம் (மாணவரியல்)
[வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.]
4.மெய்யைத் தொழுதல்
- மெய்யுல கெல்லாஞ் செய்முதற் கடவுள்
உலகத்தை எல்லாம் உருவாக்கக் கூடிய முதன்மையான கடவுள் உண்மையே ஆகும்.
- உலகப் பொருட்கெலா முயிரென நிற்பது.
உலகத்தில் உள்ள பொருட்களுக்கு எல்லாம் உயிராக நிற்பது உண்மையே ஆகும்.
- அறிவா யெங்கணுஞ் செறிவா யமைந்தது.
உண்மை, உலகம் எல்லாம் ஞானமாக நிறைந்து விளங்குகிறது.
- பகுத்தறி யுயிர்வினைப் பயனதற் களிப்பது.
உண்மை, மனிதர்களின் செயல்களின் விளைவை அவர்களுக்கு அளிக்கிறது.
- உலகந் தனதரு ணலனுற வாள்வது.
உண்மை, தனது அருளினால் பல நலன்களை உலகத்திற்கு அளித்து ஆள்கிறது.
- தொழுமுறை யதனைமுப் பொழுது முள்ளல்.
எப்பொழுதும் மெய்ப்பொருளை நினைப்பதே அதனைத் தொழும் முறையாகும்.
- உள்ளியாங் குறங்கி யுள்ளியாங் கெழுதல்.
உண்மை, தான் நினைக்கும் வண்ணம் தன்னை மறைக்கும் மற்றும் தன்னை வெளிப்படுத்தும் இயல்புடையது.
- எம்மதக் கடவுளுந் தம்ம தெனக்கொளல்.
எல்லா மதக்கடவுளும் நம்முடைய கடவுள் என்று ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
- உலகி லதனடு வோர்ந்து நிற்றல்.
உலகத்தில் உண்மையின் நடுநிலைமையை அறிந்து கொள்ளவேண்டும்.
- அந்தண ராகி யதனிலை யடைதல்.
உண்மையின் நிலையை(விருப்பு வெறுப்பு அற்ற உயர்ந்த நிலை) அடைய வேண்டும்.
வ.உ.சிதம்பரனார்
Leave a Reply