இன்றும் இருக்கிறார் இலக்குவனார் – ஈரோடு தமிழன்பன் இலக்குவனார் திருவள்ளுவன் 05 December 2014 No Comment இன்றும் இருக்கிறார் இலக்குவனார் வைகை இலக்குவனார் வாழ்ந்தவரை தட்டுப்பாடில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது தமிழ் வெள்ளத்தால் மதுரைத் தென்றல் அவரிடம் மாணவராய் இருந்து புயலாவ தெப்படி என்று பயின்று கொண்டது கண்ணகி எரித்த நெருப்பின் மிச்சத்தில் இந்தித் திணிப்புக்கு எரியூட்டியவர் இலக்குவனார் இயற்றமிழ்மேல் இசைத்தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் பொறாமை ஏற்பட்டதுண்டு! இயலுக்குக் கிடைத்ததுபோல் ஓர் இலக்குவனார் கிடைக்கவில்லையே என்று! ஏகபோகம் எங்குமே எதிர்க்கப்பட வேண்டியதுதான்! ஆனால் புலமை ஏகபோகத்தை எப்படி எதிர்ப்பது? பொழிப்புரை பதவுரைப் புலவரல்லர் அவர், விழிப்புரை உணர்வுரைப் புலவர்! சங்கப் புலவர் நெஞ்சின் சாரம் இங்கு இலக்குவ மின்சாரம்! கழிசடைப் புலவர்கள் மத்தியில் கந்தகக் கொள்ளி அவரை வழிபட்டே சூரியனும் வெப்பத்தைத் தப்பின்றி உச்சரிக்கக் கற்றுக் கொண்டான்! தொல்காப்பியத்தில் அதிரடிப் புலமை நடவடிக்கை அவர் மேற்கொண்டதால்… அன்னைத் தமிழின் பாதுகாப்பு அகழி இன்னும் அதிகம் ஆழமாயிற்று! பொய்யும் வழுவும்… இலக்குவ ஐயர் காலில் விழுந்தன. அந்த நாள் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனே இருபதாம் நூற்றாண்டில் இலக்குவனாரானான்! அலைகள் ஓய்ந்த நாளிலும் அவர் போராட்டம் ஓய்ந்ததில்லை! பத்திரிகையே படிக்காத பேராசிரியர்கள் மத்தியில் இவர் பத்திரிகை நடத்தினார்! அதனால் பொய்யைச் சுட்டுக் கொண்டே கையைக் சுட்டுக் கொண்டார்! சந்தாக் கட்டாதவனுக்கும் இந்தா இந்தா என்று கொடுத்தால் என்ன நடக்கும்? இவர் வாழ்வும் இந்தியை எதிர்த்தது மரணமும் இந்தியை எதிர்த்தது. இருட்டுச் சட்டம் சிறையில் அடைத்தது அவரை! ஒளியாய் உள்ளே கிடந்தார்! கப்பல்தான் கடலில் மூழ்கும்! கடலை மூழ்கடிக்க முடியுமா? எதிர்ப்புகள் இலக்குவனாரை உதிர்க்க முடியவில்லை! இன்றும் இருக்கின்றார் இலக்குவனார்! தமிழ் வாழ்க என்பாரின் தங்க உதடுகளில்! இன்றும் இருக்கிறார் இலக்குவனார் தமிழன் நான் எனநிமிரும் தன்மானத் தமிழன் நெஞ்சில்! இன்றும் இருக்கிறார் இலக்குவனார் இன்றும் இருக்கிறார்… தமிழைத் தமிழாய்க் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ் உணர்வில்! இலக்குவனார் இறப்பதில்லை! – ஈரோடு தமிழன்பன் Topics: கவிதை Tags: ஈரோடு தமிழன்பன், கவிதை, சி.இலக்குவனார், புதியபார்வை Related Posts தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-இலக்குவனார் திருவள்ளுவன் செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-2(2010): இலக்குவனார் திருவள்ளுவன் அறிவியலுக்குக் கிரந்தம் தேவையா? -இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் 2 – இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ்த்தாயைப் புறக்கணிக்கும் கன்னடச் சேய் – இலக்குவனார் திருவள்ளுவன் குறள் கடலில் சில துளிகள் 28. – துன்பம் வந்ததை நீக்கி, வருவதிலிருந்து காப்போரைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply