kavignar-mudiyarasan02
காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்
கைம்மாறு விழைந்து புகழ் பெறுதல் வேண்டி
மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை
மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்
தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்திவிட்டுத்
தேட்டையிடம் பாடுபவன் கவிஞன் அல்லன்
மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்பட்டு
மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்

ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்
ஆள்க எனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்
மேலோங்கு கொடுமைகளைக் காணும் போது
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்
காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக்
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்
தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்’

– கவிஞர் முடியரசன்