கவிதை

புதிய புறநானூறு அறிஞர் அண்ணா – பாவலர் கருமலைத்தமிழாழன்

anna04

அண்ணாவே வாழ்க! வாழ்க !

போர்முரசே தமிழர்தம் மானம் காத்த
போர்வாளே ! சூழ்ச்சிகளைச் செய்து வந்த
பார்ப்பனிய பகைமுடித்த படையின் ஏறே !
பகுத்தறிவு பெரியாரின் கொள்கை தாங்கி
ஊர்முழுதும் குவிந்திருந்த மூடக் குப்பை
உதவாத சாத்திரத்தை அறிவுத் தீயால்
சேர்த்தெரித்த எழுகதிரே ! சரித்தி ரத்தைச்
செதுக்கிவைத்த புதுவரியின் புறநா னூறே !

பேச்சாலும் எழுத்தாலும் திராவி டத்துப்
பெருமையினை உணரவைத்து வளர்த்து விட்டாய்
கூச்சலிட்டே வந்தஇந்திப் பெண்ணின் நாவைக்
கூர்தமிழ்வா ளால்வெட்டி விரட்டி விட்டாய்
ஓச்சிநின்ற வடமொழியின் கலப்பை நீக்கி
ஒளிர்ந்திடவே தனித்தமிழை ஏற்றி விட்டாய்
கீச்கீச்சென் றுளறிவந்த வடவ ருக்குக்
கீழ்த்தட்டு அரசியலை ஊட்டி விட்டாய் !

புரையாக இருந்தபழம் பஞ்சாங் கத்தைப்
புதுக்கருத்து நாடகத்தால் வெட்டிச் சாய்த்தாய்
திரைப்படத்தில் மிட்டாமி ராசுகள் செய்யும்
திமிரடக்கிச் சமத்துவத்தை நாட்டி வைத்தாய்
உரைநடையில் தேனூற்றி மொழிய டுக்கி
உலைநெருப்பாய் நம்நாடு காஞ்சி ஏட்டில்
தரைகுனிந்த தமிழரினைத் தலைநி மிர்த்த
தன்மான உணர்வூட்டித் தெளிய வைத்தாய் !

பாவேந்தர் பாட்டாக ஆட்சி யேறிப்
பசுந்தமிழில் தமிழ்நாடு பெயரை வைத்தாய்
சாவேந்த மும்மொழியைப் பாடை யேற்றிச்
சரித்திரமாய் இருமொழியில் கல்வி தந்தாய்
பூவேந்தி சீர்திருத்த மன்றல் காணும்
புரட்சிக்குச் சட்டத்தில் வழியை வைத்தாய்
நாவேந்தி மொழிந்தவாறு படிகள் மூன்று
நல்லரிசி வழங்கிமக்கள் மகிழ வைத்தாய் !

மாற்றானின் தோட்டத்து மல்லி கைக்கும்
மணமுண்டே என்றுரைத்த சொற்குக் காட்டாய்
மாற்றாரை மதித்ததொடு மாற்றார் போற்ற
மாண்புடைய அரசியல்பண் பாட்டைத் தந்தாய்
ஏற்றத்தைக் காண்பதற்கே எதையும் தாங்கும்
எஃகிதயம் வேண்டுமென்றே உரத்தை ஊட்டிப்
போற்றிடுவாய் கண்ணியத்தைக் கட்டுப் பாட்டைப்
பொலிந்திடுவாய் கடமையிலென் றறிவைத் தந்தாய் !

கால்படாத தமிழகத்தின் ஊர்க ளில்லை
கரம்படாத பல்துறையின் நூல்க ளில்லை
வால்பிடித்த அரசியலை மாற்றி உன்போல்
வளர்த்திட்ட குடும்பப்பாச அண்ண னில்லை
ஆல்போலத் தமிழ்மொழியை வளர்ப்ப தற்கே
அருந்தம்பி போர்ப்படையை அமைத்துத் தந்தாய்
கோல்பிடித்தே நல்லாட்சிக் கெடுத்துக் காட்டாய்
கொலுவிருந்த அண்ணாவே வாழ்க! வாழ்க !

 -பாவலர் கருமலைத்தமிழாழன்

karumalaithamizhalan

2 thoughts on “புதிய புறநானூறு அறிஞர் அண்ணா – பாவலர் கருமலைத்தமிழாழன்

    • இலக்குவனார் திருவள்ளுவன்Post author

      மரபுநடையில் நல்ல தமிழில் எழுதும் தங்களின் கவிதைகள் மேலும் வரவேற்கப்படுகின்றன. நன்றி. தங்கள் அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!/

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *