பேரறிஞர் அண்ணாவின் குமரிக்கோட்டம்: முன்னுரை – தொடர்ச்சி

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம்


அத்தியாயம் 1.


“சிரீமான் குழந்தைவேல் செட்டியார்வாள், மகா உத்தமர். அவருடைய திவ்விய குணத்தைத் தேசம் பூராவும் போற்றுகிறது. இப்படிப்பட்டவா, ஒரு சிலராவது இருப்பதாலேதான், காலம் கலிகாலமா இருந்தாலும், மழை பெய்யறது, பூலோகத்தைச் சமுத்திராதி உற்பாதங்களால் அழிக்க முடியவில்லை” என்று கூறலாம்.

“உலகமே தலைகீழாக மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்திலே, பெரியவாளுடைய காரியங்களை நாசம் செய்யறதை, பிரமாதமான சீர்திருத்தம்னு பேசிண்டிருக்கு, ஒரு ராட்சசக் கூட்டம். அப்படிப் பட்டவாளெல்லாம், நம்ம செட்டியாரின் சர்வ பரித தியாகத்தைக் கேட்டாளானா, நடுநடுங்கிப் போவாள். லோகத்திலே , எல்லா விதமான பாசத்தையும் ஒருவர் அடக்கலாம். ஆனா, இந்தப் புத்திரபாசம் இருக்கே, அதனைச் சாமான்யமா அடக்க முடியாது. சக்கரவர்த்தி தசரதனாலே கூடப் புத்திரசோகத்தைத் தாங்கமுடியவில்லை என்பது லோகப் பிரசித்தமான விசயம். நம்ம செட்டியார், தமது குமாரன், ஒரே மகன் , ஆச்சார அனுட்டானாதிகளுக்கு விரோதமான காரியம் செய்யத் துணிந்தபோது, எவ்வளவோ இதோபதேசம் செய்து பார்த்தும், அவன் பிடிவாதமாக இருக்கக் கண்டு என்ன செய்தார்? மகன் என்ற பாசத்தைக் கூட , உதறித் தள்ளிவிட்டார். அவ்விதமான தவச் சிரேட்டராக்கும், நமது செட்டியார்வாள். தமது ஒரே புத்திரன் ஏகோ கால வித்தியாசத்தாலும். கெட்டவா சகவாசத்தினாலும், பொதுவாகவே லோகத்திலே இப்போது தலைவிரித்து ஆடுகிற அதருமக் கோட்பாடுகளை நம்பிய தனால், உத்தமமான வைசிய பரம்பரையிலே உதித்ததையும் மறந்து, கேவலமான காமாதி பாசத்திற்குப் பலியாகி , குலதர்மத்தைக் கைவிட்டு, வேறுகுல திரீயை மணம் செய்து கொள்ள வேண்டுமென்று, பிடிவாதம் செய்தது கண்டு, சோகம் கொண்டு, தம் மகனுக்குச் சாத்திராதிகளைச் சாங்கோபாங்கமாக எடுத்துத் கூறித் தடுத்துப்பார்த்தும், முடியாததால், பெரியவா காலந்தொட்டு இருந்து வரும் புராதன ஏற்பாட்டுக்கு விரோதமாக நடந்து கொள்வதைக் கைவிட்டு விடாத பட்சத்தில், இனித் தம் கிருகத்தில் காலடி எடுத்து வைக்கவே கூடாது என்று கூறிவிட்டார். உன் முகாலோபனமும் செய்யப்போவதில்லை என்று சொல்லிவிட்டார். அவனும் வீட்டைவிட்டுப் போய்விட்டான்.

புத்திரசோகம் மகா கொடுமை அதனை நமது செட்டியார் தாங்கிக்கொண்டது நமக்கெல்லாம் , ஆச்சிரியமாக இருக்கு. ஆனா, ராசரிசிகளின் மனம் எப்போதும் இப்படித்தான் இருக்கும். அவருடைய தரும மார்க்கத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். அவருடைய புகழ் பாரதவர்சத்துக்கே ஒரு புகழ் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட தன்யரை, வரவேற்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்தது பற்றி நான் மிகவும் சந்தோசப்படுகிறேன். பகவான், கீதையில் சுதர்மத்தை நிலைநாட்டத் தமது சொந்த மகனையும் விட்டுப் பிரியத் துணிந்த, மகானைத் தரிசித்தும், அவருடைய மன உறுதியைப் பாராட்டியும், மகாசனங்கள் சீரும் சிறப்பும் பெறுவார்கள். இவருடைய புத்திரனும், கெட்ட கிரகம் மாறி நல்லகிரகம் உதித்ததும், குலத்தைக் கெடுத்து, உத்தமமான தகப்பனாரின் மனத்தைப் புண்படுத்திய பாபத்தை எண்ணி வருத்தமடைந்து பிறகு தானாக வீடு வந்து சேர்ந்து, தகப்பனார் காலில் விழுந்து சேவிக்கத்தான் போகிறான். சத்தியம் செயிக்கும் என்பது சாமான்யாளுடைய வாசகமோ ! ஆகவே உத்த மோத்தமரான சீமான் செட்டியாரை, நான் ஆசீர்வதித்து, இந்த ஊர் சத்சங்கத்தார் சார்பில், அவருக்கு இந்த மாலையைச் சூட்டுகிறேன். சே. சீத்தாராம்! சே,சே!
# # #

ரோசாமாலை, சாதாரணமாகக் கோயில்களில் மூலவருக்குப் போடுவதுபோல, மிகப் பெரிதாகத்தான் இருந்தது. நெற்றியிலே விபூதி தரித்துக்கொண்டு மார்பிலே நூலுடன், விலையுயர்ந்த பட்டுக்கரை வேட்டி உத்தரியம் அணிந்து கொண்டு, அந்த ரோசா மாலையுடன் நின்று, சபையோரை நோக்கிக் குழந்தை வேலச் செட்டியார் கும்பிட்டுக்கொண்டு நின்றபோது, நாயன்மார்போலவே இருந்தது. தாழையூர் சத்சங்கம் சனாதன மார்க்கத்தைப் பாதுகாக்க ஏற்பட்டது. அந்தச் சங்கத்தார் வெளியூரிலிருந்து வரவழைத்திருந்த வக்கீல் வாசு தேவசர்மா, உருக்கமான அந்தப் பிரசங்கத்தை செய்து விட்டுரோசாமாலையைச் செட்டியாருக்குப் போட்டதும், அவர் அடைந்த ஆனந்தம், இவ்வளவு என்று அளவிட முடியாது. வார்த்தைகள் சந்தோசத்தால், சரியாக வெளி வரவில்லை .

“பிராமணோத்தமர்களே ! பிரம்ம, சத்திரிய , வைசிய, சூத்திர , என்று பெரியவர்கள் ஏற்பாடு செய்திருக் கும் சாதி ஆச்சார முறைப்படி, அடியேன் வைசிய குலம். இந்தப் பாபியின் மகனாகப் பிறந்தவன், அந்த ஆச்சாரத்தைக் கெடுக்கத் துணிந்தான். பிரபஞ்சத்துக்கே நாசம் சம்பவிக்கக் கூடியது அதர்மம். அந்த அதர்மத்தைச் செய்ய, ஒரு மகன் எனக்குப் பிறந்தான்; நான் என்ன பாபம் செய்தேனோ, பூர்வத்தில். அவள் என்ன சாதியோ, என்ன குலமோ, ஒரு பெண், அவளைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்றான் , தடுத்தேன்; எவ்வளவோ புத்தி சொல்லிப் பார்த்தேன், கேட்கவில்லை. கடைசியில், இந்த பாபக் கிருத்யத்துக்கு உடந்தையாக இருக்கும் மகாபாபம் நமக்குச் சம்பவிக்கக் கூடாது என்று தோன்றிற்று. நமது சர்மா அவர்கள் சொன்னது சத்யவாக்கு. எனக்குப் புத்திர சோகம் தாங்கமுடியவில்லை. ஆனாலும், மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, அவனை வீட்டை விட்டு போய் விடச் சொல்லி விட்டேன். இனி அவன் எக்கேடு கெட்டாலும், உலகம் என்னைத் தூற்றாது. அவனுடைய முகாலோபனமும் செய்யப் போவதில்லை என்று சங்கற்பம் செய்து கொண்டது மட்டுமல்ல, என் சொத்திலே ஒரு பைசாகூட அந்த நீசன் அடையப் போவதில்லை.
ஏதோ பகவத் சங்கற்பத்தால், நான் கொஞ்சம் சம்பத்து அடைந்திருக்கிறேன். அதை இனிச் சத் காரியங்களுக்கு உபயோகித்து, போகிற கதிக்கு நல்லது தேடிக்கொள்வது என்று முடிவு செய்து விட்டேன். என் சொத்து, சுயார்சிதம். ஆகவே அந்தத் துட்டன், என்னிடம் வரமுடியாது. என்னைப் பிரமாதமாகப் புகழ்ந்த சத்சங்கத்தாருக்கு என் நமசுகாரத்தைக் கூறிக்கொண்டு, இனி உங்களுடைய ஆசீர்வாத பலத்தால் அடியேன் தன்யனாவேன் என்றும் சொல்லிக் கொள்கிறேன். சிலாக்யமான சேவை செய்து வரும் சத்சங்கத்தாருக்கு என் சக்தியானுசாரம். ஏதாகிலும் தர வேண்டும் என்று ஆசை. ஆகவே ஆயிரம் உரூபாய் கொண்ட இந்தப் பணமுடிப்பைச் சத் சங்கத்தாருக்குத் தருகிறேன்’ என்று கூறி, பணமுடிப்பையும் தந்தார். அந்தப் பரம பாகவதரை, மறுபடி ஒருமுறை ஆசீர்வதித்தார் வாசுதேவ சர்மா. அன்று தாழையூர் மகாசனங்கள் செட்டியாரைப் புகழ்ந்தனர்; சத்சங்கத்திலிருந்து அவர் மேளதாளத்துடன் ஊர்வலமாக வீடுவரை அழைத்துச் செல்லப்பட்டார்.

(தொடரும்)

கா.ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம்