(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 2 இன் தொடர்ச்சி)

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம்


அத்தியாயம் 1 தொடர்ச்சி

“என்னைச் சித்திரவதை செய்வது, அதற்குப் பெயர், காதல் – ஏண்டா தம்பீ! காதல் தானே! பெற்றெடுத்த தகப்பனைக்கூட எதிர்க்கச் சொல்கிறதடா அந்தக் காதல்! ஊரிலே, உலகத்திலே, எவனுக்கும் ஏற்பட்டதில்லை காதல் ; உனக்குத்தானே முதலிலே உதித்தது அந்தக் காதல், என் உயிருக்கு உலைவைக்க.”

“நான் தங்கள் வார்த்தையை எப்போதாவது மீறி நடந்ததுண்டா ?”

“மீறி நடப்பவன் மகனாவானா?”

“இது எனக்கு உயிர்ப்பிரச்சனையப்பா!”


“படித்ததை உளறுகிறாயா? இல்லை அந்தக் கள்ளி கற்றுக்கொடுத்த பாடத்தை ஒப்புவிக்கிறாயா? எனக்குக் கூடத் தெரியுமடா, அழுவதற்கு ! தலைதலை என்று அடித்துக்கொண்டு, ஒரு திருஓட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு எங்காவது தேசாந்திரம் போகிறேன். நீ திருப்தியாக வாழ்ந்து கொண்டிரு அந்தத் திருட்டுச் சிறுக்கியுடன். ஈசுவரா ! எனக்கு இப்படி ஒரு மகன் பிறக்க வேணுமா, மானம் போகிறதே! தாழையூரிலே தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லையே. அடே ! நீ அவளைக் கலியாணம் செய்துகொள்ளத்தான் வேண்டுமா? ஒரே பேச்சு, சொல்லிவிடு ; என் சொல்லைக் கேட்கப்போகிறாயா, இல்லை, அவளைத்தான் கலியாணம் செய்தாக வேண்டும் என்று கூறுகிறாயா? இரண்டில் ஒன்று சொல்லிவிடு .”

“நான், நாகவல்லியைத் தவிர வேறோர் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள முடியாதப்பா.”

“செய்து கொண்டால் அவளைக் கலியாணம் செய்து கொள்வது, இல்லையானால் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடப் போகிறாயா? சரி! நீ பிரம்மச்சாரியாகவே இருந்து தொலை. உனக்கே எப்போது பித்தம் குறைகிறதோ, அப்போது பார்த்துக்கொள்வோம். . . . . . . .”

“அப்பா ! நான் நாகவல்லிக்கு வாக்களித்துவிட் டேன்.”

“தகப்பன் உயிரை வாட்டுகிறேன் என்றா”

“இன்னும் ஒரு வாரத்தில் அவளைக் கலியாணம் செய்து கொள்வதாக.”

“பழனி ! நட, இந்த வீட்டை விட்டு; என்னை, இதுவரை, சம்மதம் தரவேண்டு மென்று ஏன் கேட்டுக் கொண்டிருந்தாய்? அவளுக்கு வாக்குக் கொடுத்த போது, உன் புத்தி எங்கே போயிற்று? நான் ஒருவன் இருக்கிறேன் என்ற நினைப்புக்கூட இல்லை உனக்கு. இனி நீ என் மகன் அல்ல, நான் உனக்குத் தகப்பனல்ல. அடே பாவி! துரோகி ! முத்தைக் கெடுக்கப் பிறந்த கோடாரிக்காம்பே! என்னை ஏன் உயிருடன் வதைக்கிறாய்? நான் தூங்கும் போது பெரிய பாறாங்கல்லை என் தலைமீது போட்டுச் சாகடித்துவிடக் கூடாதா? என் சாப்பாட்டிலே பாசாணத்தைக் கலந்துவிடக் கூடாதா? என் பிணம் வெந்த பிறகு நீ அந்தக் கிருத்தவச்சியை மணம் செய்து கொள்ளடா, மகராசனாக!

“அப்பா ! நான் இதுவரை தங்களிடம் இப்படிப்பட்ட கடுமையான பேச்சைக் கேட்டதில்லையே!”

” அடே ! பேசுவது நீ அல்ல! போதையிலே பேசுகிறாய். நாகத்தைத் தீண்டியதால் மோகம் என்ற போதை உன் தலைக்கு ஏறிவிட்டது.”

“மோகமல்ல அப்பா ! காதல் ! உண்மைக் காதல்!”

“நாடகமா ஆடுகிறாய்?” “என் உயிர் ஊசலாடுகிறதப்பா ?”

# # #


இப்படிப்பட்ட கடுமையான உரையாடலுக்குப் பிறகுதான், பழனி, வீட்டை விட்டு வெளிக்கிளம்பினான், தகப்பனாரையும் அவருடைய தனத்தையும் துறந்து. நாகவல்லி, தன் சினேகிதை அம்சாவுக்கு, தனக்கு ஏற்பட்ட காதல் வெற்றியைப் பற்றிக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தபோது, பழனி நைடதம் படித்துக் கொண்டிருந்தான். நளனும் தமயந்தியும் காதல் விளையாட்டிலே ஈடுபட்ட கட்டத்தைப் படித்த போது, அவனுக்குச் செய்யுளின் சுவையை நாகவல்லிக்குக் கூறவேண்டுமென்று எண்ணம் பிறந்தது. உள்ளே நுழைந்தான், கடிதத்தை எடுத்தான், படித்தான், களித்தான், பரிசும் தந்தான். வழக்கமான பரிசுதான்! அவனிடம் வேறு என்ன உண்டு தர? குழந்தைவேல் செட்டியார் கலியாணத்துக்குச் சம்மதித்திருந்தால், வைரமாலை என்ன, விதவிதமான கைவளையல்கள் என்ன, என்னென்னமோ தந்திருப்பான். இப்போது தரக்கூடிய தெல்லாம் ! மணப் பெண்ணுக்கு மாப்பிள்ளை முத்தாரமின்றி வேறோர் ஆபரணம் தரவில்லை; அது போதும் என்றாள் அந்தச் சாசி !! வயோதிகக் கணவன் தரும் வைரமாலை, இதற்கு எந்த விதத்திலே ஈடு?

நாகவல்லியின் கடிதம் முடிகிற நேரத்திலேதான், ஒரே மகனைக்கூட வீட்டைவிட்டு வெளியேற்றிவிடும் அளவுக்கு வைராக்கியம் கொண்ட சனாதனச் சீலர் குழந்தைவேல் செட்டியாரைத் தாழையூர் சத் சங்கம் பாராட்டிக் கொண்டிருந்தது. ஊர்வலமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவருடைய எதிரிலே, நாகவல்லியும் பழனியும் கைகோத்துக் கொண்டு நின்று கேலியாகச் சிரிப்பது போலத் தோன்றிற்று. திடசித்தத்துடன், மகனை வீட்டை விட்டுத் துரத்திவிட்டாரே தவிர, மனம் கொந்தளித்தபடி இருந்தது; அவரையும் அறியாது அழுதார். ஆனந்த பாசுபம் என்றனர் அன்பர்கள் !
“நாடகமா ஆடுகிறாய்?” “என் உயிர் ஊசலாடுகிறதப்பா ?”

# # #


வெள்ளிக்கிழமை, பழனி – நாகவல்லி வாழ்க்கை ஒப்பந்தம் பத்தே ரூபாய்ச் செலவில் விமரிசையாக நடை பெற்றது. சில்லா சட்சு சமதக்னி தலைமை வகித்தார்.

பச்சை, சிகப்பு, ஊதா, நீலம் முதலிய பல வண்ணங்களிலே பூ உதிர்வது போன்ற வாண வேடிக்கை ! அதிர் வேட்டு, தாழையூரையே ஆட்டி விடும் அளவுக்கு. அழகான தங்கநாயனத்தை அம்மையப்பனூர் ஆறுமுகம் பிள்ளை, வைரமோதிரங்கள் பூண்ட கரத்திலே ஏந்திக் கொண்டு, தம்பிரான் கொடுத்த தகட்டியை, செமீன்தார் சகவீரர் பரிசாகத் தந்த வெண்பட்டின் மீது அழகாகக் கட்டி விட்டு, இரசிகர்களைக் கண்டு இரசித்து நிற்க, துந்துபிகான துரைசாமிப்பிள்ளை, “விட்டேனா பார்” என்ற வீரக் கோலத்துடன் தவுலை வெளுத்துக் கொண்டிருந்தார், பவமறுத்தீசுவரர் பிரம்மோத்சவத்தின் ஆறாம் திரு விழாவன்று. அன்று, உபயம், ஒரே மகனையும் துறந்து விடத் துணிந்த உத்தமர் குழந்தைவேல் செட்டியார் உடையது. அன்று மட்டுமல்ல, செட்டியார் ஒவ்வோர் நாளும் அது போன்ற ஏதாவதோர் பகவத் சேவா” காரியத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பணமும், பகவானுடைய சேவையினால் மளமளவென்று பெட்டியை விட்டுக் கிளம்பியபடி இருந்தது. ஊரெங்கும் செட்டியாரின் தருமகுணம், பகவத்துசேவை இவை பற்றியே பேச்சு . “இருந்தால் அப்படி இருக்க வேண்டும் மகனென்று கூடக் கவனிக்கவில்லை. சாதியைக் கெடுக்கத் துணிந்தான் பழனி, போ வெளியே என்று கூறி விட்டார். இருக்கிற சொத்து அவ்வளவும் இனிப் பகவானுக்குத்தான் என்று சங்கல்பம் செய்து கொண்டார் ” என ஊர் புகழ்ந்தது. பழனியின் நிலைமையோ!

“உன் தகப்பனார் பெரிய வைதிகப்பிச்சு அல்லவா? அவரைத் திருத்த முடியாத நீ ஊரைத் திருத்த வந்து விட்டாயே, அது சரியா?”

“தகப்பனார் பேச்சைக் கேட்காதவனுக்குத் தறுதலை என்று பெயர் உண்டல்லவா? நீ ஏன் பழனி என்று பெயர் வைத்துக் கொண்டாய்? தறுதலை என்ற பெயர்தானே பொருத்தம்?”

(தொடரும்)

கா.ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம்