சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 2
(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி)
காட்சி இரண்டு
வால்மீகி ஆசிரமத்தில் சீதை அடைக்கலம்
[இடம்: கங்கை யாற்றின் தென்கரை ஓரம்.
நேரம்: பகல்.பங்கு கொள்வோர்: சீதை, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்]
[அரங்க அமைப்பு:
தேரில் கங்கையின் வடபுறம் வந்திறங்கிப் பின் குகன் ஓட்டி வந்த படகில் கங்கை யாற்றைக் கடந்து இலட்சுமணன், சீதை ஆகியோர் கரையோரத் தோப்பின் மரநிழலில் தங்குகின்றனர். குகன் சீதையின் ஆடை, ஒப்பனை, அணிகலன் பேழைகளைச் சுமந்து கொண்டு அவர்களுக்குப் பின் தொடர்கிறான்]
இலட்சுமணன்: (சீதையைக் கும்பிட்டுத் திடீரெனக் காலில் விழுந்து, தழுதழுத்த குரலில் கண்ணீருடன்) அண்ணி! என்னை மன்னிக்க வேண்டும். …. இல்லை! இல்லை! … என்னை மன்னிக்க வேண்டா!. உங்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்து விட்டேன்! துரோகத்துக்கு உடந்தையாக இருந்து, துரோகச் செயலைத் தடுக்க வலுவின்றி, துரோகக் கட்டளைக்கு அடிபணிந்து, பாசமுள்ள உங்களுக்கு வஞ்சகம் செய்து விட்டேன்! … நான் கோழை! … நான் வஞ்சகன்! … என்னை மன்னிக்காதீர்கள்! .. என்னை இறைவன் தண்டிப்பான். செய்யத் தகாத செயலைத் தெரிந்தே செய்து விட்டேன்!
சீதை: (புரியாத விழிகளுடன்) நீ என்ன சொல்கிறாய் ? நீ என்ன வஞ்சகம் செய்துவிட்டாய் ? மன்னிக்கச் சொல்லிப் பிறகு மன்னிக்க வேண்டா மென்று ஏன் மன்றாடுகிறாய் ? ஏன் உடம்பு நடுங்குகிறது ?
இலட்சுமணன்: (காலைப் பிடித்து கொண்டு, மேலே திரும்பி) அண்ணி! அருமை அண்ணி! எப்படிச் சொல்வேன் உங்களுக்கு ? அண்ணனிட்ட தண்டனையை உங்களுக்கு எப்படிச் சொல்வேன் அண்ணி?
சீதை: உன் அண்ணா, என்ன தண்டனை எனக்கு விதித்திருக்கிறார்? புரிய வில்லையே. புரியும்படிச் சொல் இலட்சுமணா, சொல்!
இலட்சுமணன்: [நேரே பார்க்காமல் முகத்தைத் திருப்பித் தடுமாற்றமுடன்] அண்ணி! உங்களை அண்ணா நாடு கடத்தியுள்ளார்! உங்கள் இதயக் கோயிலில் குடியுள்ள எங்கள் அருமை அண்ணா!
சீதை: [கூர்ந்து நோக்கி] நான் என்ன குற்றம் செய்தேன் ? சுற்றி வளைக்காமல் நேராகப் பேசு!
இலட்சுமணன்: அண்ணி! நீங்கள் எந்தக் குற்றமும் புரிய வில்லை. உங்களை இன்று காட்டில் விட்டு விட்டு வரவேண்டு மென்று எனக்கு அண்ணாவின் உத்தரவு. கட்டளையை நிறைவேற்றி விட்டேன். போன வனவாசத்தில் நிகழ்ந்த தவற்றுக்கு, இப்போது புது வனவாசம் உங்களுக்கு! இரண்டாம் வனவாசம்!
சீதை: கட்டளை நிறைவேற்றி விட்டாய்! முதலில் கட்டளை ஏன் பிறந்தது ? ஏதோ நடந்திருக்கிறது. ஏன் மறைத்து மறைத்துப் புதிர் போடுகிறாய் ? மறைக்காமல் நடந்ததைச் சொல் இலட்சுமணா!
இலட்சுமணன்: அன்று கைகேயி சிற்றன்னையின் வரத்தைக் காப்பாற்ற தந்தைக்கு அடிபணிந்து, காடேக ஒப்புக்கொண்டார். இப்போது குடிமக்கள் அவச்சொல்லுக்கு அடிபணிந்து, உங்களைக் காட்டுக்கு அனுப்பத் தண்டனை விதித்திருக்கிறார். அதனால் அண்ணா அவமானப் பட்டாராம்!
சீதை: அவச்சொல்லால் என் பதிக்கு அவமானமா ? குடிமக்கள் என்னைப் பற்றி என்ன அவச்சொல்லை இவருக்குச் சொன்னார்களாம் ? இந்த அவமானத்தை என் பதி எனக்கல்லவா முதலில் சொல்ல வேண்டும்? என் தொடர்பான இந்த அவமானம் எனக்குத் தெரியாமல், முதலில் உங்களுக்குத் தெரிந்திருப்பது இப்போது எனக்கு அவமானமாகத் தோன்றுகிறது. நான் அவரது மனைவியா அல்லது அந்தப்புரப் பெண்ணடிமையா? மனைவி அருகில் இருந்தது தெரியாமல் போனது. மதிப்புள்ள மிதிலை நாட்டு மன்னரின் புதல்வி என்பதும் மறந்து போனது. என்னால் ஏற்பட்ட அவமானம் அவரை மட்டுமா தாக்கும்! என்னையும் தாக்கும்! என் தந்தையையும் பாதிக்கும்! என்ன அவமானம் என்னருமைப் பதிக்கு ?
இலட்சுமணன்: அசோக வனத்தில் காலம் தள்ளிய உங்கள் புனிதத்தில் அண்ணாவுக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! இலங்கை வேந்தன் சிறையிட்ட உங்களை உத்தமி என்று முற்றிலும் நம்புகிறார். ஆனால் குடிமக்கள் மனத்தில் உங்கள் மீது தப்பான ஐயம் எழுந்துள்ளது. இராவணன் உங்களைத் தொட்டுத் தூக்கிச் சென்றானாம். பல வருடங்கள் அவனது அரண்மனையில் நீங்கள் வைக்கப் பட்டிருந்தீர்களாம்! அண்ணா நம்பித் தன்னுடன் எப்படி அரண்மனையில் வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் அண்ணாவைத் தூற்றினார்களாம். இது ஒற்றர் மூலம் அண்ணாவுக்குத் தெரிய வந்தது.
சீதை: [ஆத்திரமாய்] என்ன சொன்னாய் இலட்சுமணா! நான் களங்க மற்றவள். நான் கறை அற்றவள். இராவணன் முரட்டுத்தனமாய்ப் பற்றித் தூக்கிச் சென்றது, ஆத்மாவற்ற இந்தக் கூடாகிய உடம்பைத்தான்! என் ஆத்மா தூய்மையானது. தூய்மையான என் மனக் கோயிலில் இருப்பவர் என் பதி ஒருவர்தான்! இதை நான் எப்படி மெய்ப்பித்துக் காட்டுவது ? இராவணன் பிறர் மனைவியைக் களவாடிய அயோக்கியன்! ஆனால் அவன் கூட என்னைப் பலாத்காரம் செய்யவில்லை! அப்படி ஏதேனும் ஆகியிருந்தால் என்னுயிரை அன்றைக்கே மாய்த்திருப்பேன்! என் ஆத்மா ஏற்றுக் கொண்டு ஒருவரை மணந்தபின், விதியால் பிரிக்கப்பட்டு, மற்றவன் கையால் தீண்டப்பட்டு, அவன் மாளிகையில் வாழ்ந்தேன் என்று ஊரார் ஏசினாலும், உன் அண்ணாவுக்கு என்மேல் நன்னம்பிக்கை இல்லாமல் போனதா? உண்மையாக உன் அண்ணாவுக்குத்தான் என்மீது நம்பிக்கை யில்லை! அப்படித்தான் எனக்குத் தெரிகிறது. தன் சந்தேகத்தை மறைத்து, ஊரார் புகாரைக் காரணம் காட்டி, அவரது அன்பு மனைவியை ஏன் தண்டிக்கிறார்? நான் தூய்மையானவள் என்பதை மெய்ப்பிக்க முடியாது! குற்றமற்றவள் சீதை என்பதை மெய்ப்பிக்கக்கூடிய கூடிய ஓர் இரக்கமுள்ள அரக்கனை உன் அண்ணா போர்க்களத்தில் கொன்றுவிட்டார்! நான் தூய்மையானவள் என்று முதலில் அவர் நம்பினால்தானே, ஊருக்கு மெய்ப்பிக்க முடியும்! அன்பு மனைவியைத் தண்டித்து, அறிவு கெட்ட குடிமக்களின் அவச்சொற்களை மெய்யென்று காட்டி விட்டார்! தன்மானத்தைக் காப்பதாய்க் காட்டி என் மானத்திற்குப் பங்கம் இழைத்தார்! உன் அண்ணா எனக்குப் பதி! ஆனால் சீதை அவரது மனைவி இல்லை!
இலட்சுமணன்: அப்படி அண்ணாவைத் திட்டாதீர்கள் அண்ணி! ஊர்வாய்க்கு அண்ணா அஞ்சி மனம் நோவது உண்மையே! அதே சமயத்தில் உங்கள் தூய்மையில் அவருக்கு ஐயமில்லை என்பதும் உண்மையே! அப்படி ஐயம் இருந்தால், படை திரட்டிச் சென்று, கடல் கடந்து போரிட்டு உங்களை மீட்க வந்திருப்பாரா ?
சீதை: உடம்பு முழுதும் சந்தேக இரத்தம் ஓடும் உன் அருமை அண்ணா, ஏன் போரிட்டார் தெரியுமா? சீதாவை மீட்பதற்காகத் தோன்றினாலும் மெய்யாகச் சீதைக்காகப் போரிடவில்லை! கட்டிய மனைவியை மாற்றானிடம் விட்டுவிட்டார் என்று ஏசும் ஊர்வாயை மூடத்தான் போரிட்டார் என்பது இப்போது விளங்குகிறது எனக்கு! அவரது வீர, சூர, விற்தொடுப்பு பராக்கிரமத்தை எடுத்துக் காட்ட ஈழப்போர் ஓர் எதிர்பாராத வாய்ப்பளித்தது! உன் அண்ணாவின் வல்லமைக்குச் சவால்விட்டு இராவணன் என்னைச் சிறை வைத்ததே போருக்கு முக்கிய காரணம்! முதன்முதலாக அசோக வனத்தில் தூதுவன் அனுமானைக் கண்டதும் துள்ளியது என்னுள்ளம்! என்னை மீட்க என்னருமைப் பதி வருகிறார் என்று எல்லையற்ற ஆனந்த மடைந்தேன்! ஆனால் கரை புரண்ட அந்த ஆனந்த வெள்ளம் பின்னால் வரண்டு போனது. இராவணனைக் கொன்று என்னை முதலில் காண வரும்போது, குளமான என் கண்களுடன் அவரை நோக்கி ஓடினேன். என்னைக் கண்டதும் அவர் கால்கள் ஏனோ நின்று முன்னேற வில்லை! எனது நெஞ்சம் பிளந்தது! பெருத்த ஏமாற்றம் எனக்கு! நெருங்கிய என்னை அவர் அணைத்துக் கொள்ளவில்லை! பெருத்த அவமானம் எனக்கு! என் கண்களில் கண்ணீர் வழியும் போது, அவரது கண்களில் வறட்சி எரிந்தது! அந்த வெறுப்பும், புறக்கணிப்பும் அன்றே நான் அவர் கண்களில் கண்டேன்! மனைவியைப் பிரிந்தவர் மீண்டும் கூடும் போது முகத்தில் தெரியும் கனிவும், காதலும், களிப்பும் அவர் கண்களில் நான் காணவில்லை! அந்தப் புறக்கணிப்பை என்னால் மறக்க முடியவில்லை, இலட்சுமணா! அந்த வெறுப்பை என்னால் தாங்க முடியவில்லை ! அன்னியனால் தீண்டப்பட்ட நான் அன்றே அவர் தீண்டத்தகாத மனைவியாகி விட்டேன் ! தீண்டியவன் மாளிகையில் பட்ட துயரை விட, தீண்டாமல் காட்டில் புறக்கணிக்கப்பட்ட வேதனை என்னை எரித்துக் கொல்கிறது!
இலட்சுமணன்: இதுவரை இப்படி நீங்கள் பேசக் கேட்டதே யில்லை, அண்ணி! அண்ணாவின் சந்தேகப் பார்வை, உங்கள் மனத்தில் பச்சை மரத்தாணிபோல் அன்றே ஆழமாய்ப் பதிந்து விட்டதே!
சீதை: உண்மையாக உன் அண்ணா என்னை நேசிக்க வில்லை என்பதை திருமணமான நாளிலேயே நான் கண்டு கொண்டேன். என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவர் மிதிலாபுரிக்கு வரவில்லை! வில்லை முறிக்க வந்தார்! தன் கைப்பலத்தைக் காட்டப் போட்டிக்கு வந்தார்! என்மேல் நேசமோ, ஆசையோ கொண்டு மிதிலைக்கு வந்ததாக எனக்குத் தெரியவில்லை! வில்லை முறித்துத் தன் வல்லமையை மெய்ப்பித்தார்! சீதை ஒரு பந்தயப் பரிசு! பந்தயப் பரிசாக என் தங்கையை வைத்திருந்தாலும், அவர் மணந்து அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்! சுயம்வர மென்று என் தந்தை எல்லா மன்னரை அழைத்திருந்தாலும் யாரும் என்னைத் தேர்ந்தெடுக்க வில்லை! இதைச் சுயம்வரம் என்று எப்படிச் சொல்வது ? அவரும் என்னைத் தேர்ந்தெடுக்க வில்லை! நானும் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை! பந்தயக்காரருக்குப் பரிசின் மேல் கண்ணாகத் தோன்றினாலும், உண்மையில் பந்தயத்தின் மேல்தான் கண்! வெற்றியில் கிடைத்த பரிசு பிறகு வேண்டப்படாமல், தீண்டப்படாமல் கண்ணாடிப் பெட்டியில் அடைபடுகிறது! போட்டிப் பரிசு கறை பிடித்துப்போய் பின்னல் காணாமல் போய்விடுகிறது! பார், என்றைக்காவது உன் அண்ணா, என்னை மனிதப் பிறவியாகக் கருதிக் கலந்து பேசி எந்த முடிவும் இதுவரைச் செய்திருக்கிறாரா ?
இலட்சுமணன்: அது முற்றிலும் உண்மை அண்ணி! உங்களை மனிதப் பிறவியாக அண்ணா கருத வில்லை! இக்கொடும் தண்டனை இடுவதற்கு முன்பு உங்களிடம் ஒரு சொல் சொல்லவில்லை! உங்கள் கருத்தைக் கேட்டு உரையாட வாய்ப்பளிக்க வில்லை! அண்ணாவின் நீதி மன்றத்தில் ஒருபோக்கு, ஒருபக்க வாதம் மட்டுமே தலை விரித்தாடுகிறது! இருபோக்கு வாதம் அண்ணாவுக்குப் பிடிக்காது! வனவாசத் தீர்ப்பை நாங்கள் யாவரும் எதிர்த்தும், தடுத்தும் பயனில்லாமல் போனது, அண்ணி! அண்ணா புரியும் போரில் என்றும் தோற்பதே இல்லை! நாங்கள்தான் தோற்றுப் போனோம்.
சீதை: (குமுறிக் கோவென்று அழுகிறாள்) வனவாசத் தண்டனையை உன் அண்ணாதான் நேரடியாக அறிவிக்க வில்லை! இன்று காலை புறப்படுவதற்கு முன் நீ ஏன் சொல்ல வில்லை ? உனக்கு நான் என்ன கெடுதி செய்தேன் ?
இலட்சுமணன்: ஆமாம், இன்று நானும் சொல்லவில்லை. அண்ணா வஞ்சித்தது போல் நானும் உங்களை வஞ்சித்தது உண்மைதான். நாங்கள் இருவருமே உங்களை வஞ்சித்து விட்டோம். முதலில் உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று நாங்கள் மன்றாடினோம். சொல்வதைத் தடுத்து விட்டார்! நாங்கள் சொல்லப் போனதையும் தடுத்து விட்டார். காலையில் உங்களுக்குச் சொல்ல எனக்கு வாய்ப்பிருந்தது! சொல்லி யிருக்கலாம்! ஆசிரமத்தைக் காட்டப் போவதாய் அண்ணன் சொல்லியபடிச் சொல்லி உங்களை ஏமாற்றியது உண்மை! நான் அறிந்தே செய்த குற்றத்துக்கு அதனால்தான் என்னை மன்னிக்க வேண்டா என்று மன்றாடினேன். அன்று வனவாசத்தில் பதியுடன் களிப்போடு இருந்த உங்களைக் கடத்திப்போய்க் கலங்க வைத்துச் சிறையிலிட்டான், அயலான் இராவணன்! ஆனால் இன்றைய வனவாசம் வேறு! அரண்மனையில் பதியுடன் ஆனந்தமாக இருந்த உங்களைப் புறக்கணித்து நாடு கடத்திக் கதற வைப்பவரே உங்கள் அருமைப் பதிதான்!
சீதை: காலையில் நீ சொல்லி யிருந்தால், கதையே மாறிப் போயிருக்கும்! நான் அவரோடு போராடி இருப்பேன்! நீ யார் பக்கம் சேர்ந்திருக்கிறாய் என்பதே எனக்குத் தெரியவில்லை. பார்த்தால் நீங்கள் எல்லோரும் என்னைப் போல் உங்கள் அண்ணாவின் அடிமை! என் பக்கக் கதையைக் கேட்க உன் அண்ணாவுக்குத்தான் அறிவில்லை! நெறியில்லை! நினைவு மில்லை! பராக்கிரமப் பதிக்கு என்னிடம் பேசப் பயமா? அல்லது இவளிடம் என்ன பேச்சு என்ற புறக்கணிப்பா? நீங்கள் எல்லாம் உன் அண்ணாவின் பக்கம். யாராவது ஒருவர் எனக்காகப் போராடி உங்கள் அண்ணாவை எதிர்த்தீர்களா?
இலட்சுமணன்: நாங்கள் எல்லோரும் உங்களுக்காக வாதாடினோம். ஒரு பலனும் இல்லை. அண்ணனை மாற்ற முடியவில்லை. ஊர்வாய்க்கு அஞ்சி, உங்களை நாடு கடத்துவதில் ஒரே பிடிவாதமாக இருந்தார், அண்ணா.
சீதை: வாழ்க்கை முழுவதும் எனக்கு அடிமை வாழ்வுதான்! காட்டுக்கு வா வென்றால் வர வேண்டும்! போ வென்றால் போக வேண்டும்! வேண்டாம் என்றால் நான் விலக்கப்பட வேண்டும்! இன்று இல்வாழ்வில் நான் விலக்கப்பட்டவள்! எந்த விதத் திருமண ஒப்பந்தமும் இல்லாத சுயம்வரப் போட்டியில் கிடைத்த பரிசு முடிப்புதானே நான்! யாரிடம் போய் முறையிட்டு உன் அண்ணா செய்தது சரியா அல்லது தவறா என்று நான் நீதி கேட்பது ?
இலட்சுமணன்: உங்களுக்கு அண்ணா செய்தது அநீதி! அவரது ஆணையைக் கண்மூடி நிறைவேற்றிய நான் மெய்யாக ஒரு கோழைதான்!
சீதை: வாழ்க்கை முழுதும் நான் துயருற்று மனமுடைய வேண்டுமென்று விதி எழுதி விட்டது! நான் சோகத்தின் வடிவம்! நான் பாபத்தின் பிம்பம்! என்னால் என் பதிக்கு அவமானம் வேண்டா! என்னால் கோசல நாட்டுக்குக் கெட்ட பெயர் வேண்டா!. நான் கங்கை நதியில் விழுந்து … இப்போதே உயிரை மாய்த்துக் கொள்ளலாம். …. ஆனால் உன் அண்ணாவின் …. குலவிளக்கு என் வயிற்றில் வளரும் போது, …. நான் அப்படிச் சாக மாட்டேன். என் அற்ப உயிரை மாய்த்து, உயிருள்ள என் கர்ப்பச் சிசுவைக் கொல்ல மாட்டேன். … அதுதான் மாபெரும் பாபம்! ஆனால் அறிவுகெட்ட உன் அண்ணாவிடம், எதையும் சந்தேகப்படும் உன் அண்ணாவிடம் என் வயிற்றில் வளரும் சிசுவைப் பற்றி எதுவும் சொல்லாதே! என் சிசுவுக்காக நான் தனியே காட்டில் வாழப் போகிறேன். குடிமக்கள் புகாரிட்டாலும் என் உயிரை அழிக்கமாட்டேன்! என் வயிற்றில் வாழும் சிசு அவரது மானத்தை விட மேலானது! நெறிகெட்ட உன் அண்ணாவிடம் என் கர்ப்பத்தைப் பற்றிச் சொல்லாதே!
இலட்சுமணன்: ஆ! என்ன ? … அண்ணி… நீங்கள்…! தாய்மை அடைந்த செய்தி ஆனந்தச் செய்தியல்லவா ? அரண்மணையில் ஆனந்தமாக இதைக் கொண்டாட வேண்டிய வேளையில் உங்களைத் திண்டாட வைத்துக் காட்டில் தனியே விட்டு போகிறேனே! இறைவா! என்ன கொடுமை இது ? அண்ணன் ஒருவரைக் காட்டுக்கு அனுப்புவதாக நினைத்தார்! உண்மையில் இருவரை நாடு கடத்தி இருக்கிறார். வயிற்றில் வளரும் அவரது குலவிளக்கையும் சேர்த்து அனுப்பி விட்டார்! அண்ணி! உங்கள் இருவரையும் தனியே இந்த நடுக்காட்டில் எப்படி விட்டுச் செல்வேன் ? என் மனம் இடங் கொடுக்கவில்லை அண்ணி! நானும் இங்கேயே தங்கி உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்க முடிவு செய்து விட்டேன். அன்று வனவாசத்தில் உங்களுக்குத் நான் துணையாக இருந்ததுபோல் இப்போதும் அருகில் இருப்பேன்!
சீதை: வேண்டா!. நீ சிந்தித்துதான் பேசுகிறாயா ? அன்று வனவாசத்தில் என்னருகில் உன்னருமை அண்ணா இருந்தார். இப்போது நீ மட்டும் என்னுடன் தனியாக வசித்தால், அயோத்திபுரிக் குடிமக்கள் என்ன பேசிக் கொள்வார்? இராவணன் கூட இருந்தவள், இப்போது இலட்சுமணன் கூட வாழ்கிறாள் என்று முத்திரை குத்திவிடும். அது உங்கள் அண்ணாவுக்குக் கொடுக்கும் அடுத்த அதிர்ச்சியாக இருக்கும். நான்தான் அவமானப் படுத்தினேன் உன் அண்ணாவை! நீயுமா அவரை அவமானம் செய்ய வேண்டும்! என் கணவரே என்னைக் கைவிட்ட பிறகு இனி உன் உதவி எனக்கு எதற்கு ? முன்பு வனவாசத்தில் இருந்த போது என்மீது உனக்காசை என்று உன்மீது எனக்கே சந்தேகம் வந்துவிட்டது! அதைச் சொல்லி உன்னை நான் திட்டியும் இருக்கிறேன். போதும் உன் உதவி! எரிச்சலை உண்டாக்காதே. நான் தனியாக இந்தக் காட்டில் பிழைத்துக் கொள்வேன். போ இலட்சுமணா போ, ஒழிந்து போ! என்முன் நில்லாதே! (கத்திக் கொண்டு அலறி மயக்கமுற்றுத் தரையில் விழுகிறாள்).
இலட்சுமணன்: அண்ணி! பக்கத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமம் உள்ளது. பெண்சீடர்களின் குரல் கேட்கிறது. தந்தை தசரத மகாராசாவின் பழைய நண்பர் அவர். அங்கே போய் தங்கிக் கொள்ளுங்கள்.
சீதைக்கு மயக்கமும் வாந்தி வருகிறது. அதைக் கண்ட பெண்சீடர்கள் ஓடி வருகிறார்கள். வயதான ஒருத்தி சீதையை மடியில் கிடத்தி முகத்தையும், அவள் உடம்பையும் கூர்ந்து நோக்குகிறாள். ஒருத்தி முகத்தில் நீரைத் தெளித்து, வாயில் நீரூற்றிக் கொப்பளிக்க வைக்கிறாள்]
மூத்த சீடப்பெண்: (இலட்சுமணனைப் பார்த்து) நீங்கள் இப்பெண்ணின் கணவரா ? உங்கள் மனைவியைப் பார்த்தால் கர்ப்பவதி போல் தெரிகிறதே! எங்கள் வால்மீக முனிவரின் ஆசிரமம் அருகிலேதான் உள்ளது.
சிறிது நேரம் நீங்கள் இருவரும் தங்கிச் செல்லலாம். இந்தப் பெண் இனி பயணம் செய்யக் கூடாது.
இலட்சுமணன்: அவர்கள் எனது அண்ணனின் மனைவி. நீங்கள் என் அண்ணியை மட்டும் கூட்டிச் செல்லுங்கள். நான் இப்போது வரமுடியாத நிலையில் இருக்கிறேன். சூரியன் மறைவதற்கு முன்பு நான் அவசரமாக அயோத்திய புரிக்கு மீள வேண்டும். கொஞ்ச காலம் அண்ணி மகரிசி வால்மீகி ஆசிரமத்தில் வாழட்டும். பின்னால் என் அண்ணாவே நேராக வந்து அண்ணியை அழைத்துச் செல்வார்.
[இலட்சுமணன் சீதையின் காலைத் தொட்டு வணங்கிப் படகு நோக்கிச் செல்கிறான். குகனும் காலைத் தொட்டு வணங்கிய பின் உடை, அணிகலன் பேழையைப் பெண்சீடர்களிடம் கொடுத்து விட்டுப் பின் தொடர்கிறான்]
(இரண்டாம் காட்சி முற்றும்)
https://jayabarathan.wordpress.com/seethayanam/
Leave a Reply