தமிழரசி சிவா : thamizharasi siva

சிவன்பார்வதி : sivan_parvathiதிரிகைக்கல் : thirikaikal

தமிழ் வழிபாட்டில் தமிழர்களின் தடுமாற்றமும்

இறைவர்களின் உறுதிப்பாடும்! தொடர்ச்சி

கதைப்பாத்திரங்கள்:

 சிவன், பார்வதி, முருகன், நந்தி, நாரதர்

[திருக்கைலாயத்தில் சிவனும் பார்வதியும் முருகனுடன் இருக்க நந்தி காவல் புரிகிறார். அங்கு தளர் நடை நடந்து வந்த நாரதருடன் அவர்கள் உரையாடல் தொடர்கிறது].

முருகன்: வேதம் என்னும் தமிழ்ச்சொல் ‘வே’ என்பதன் அடியாகப் பிறந்தது. அது வேர் என்பதன் மூலமாகும். ‘தம்’ என்பது பெயர் விகுதி. எனவே தமிழில் வேதம் என்பது மூலநூல் எனப்பொருள் தரும். வடமொழியில் வேதம் என்ற சொல் வித்து – அறிவு என்ற அடியால் பிறந்து அறிவு நூல் என்ற பொருள் தரும். தமிழரின் மூலநூல் – முதன்நூல் அறம், பொருள், இன்பம், வீடு பற்றிப் பேசும். இதனையே பழந்தமிழ் இலக்கண ஆசிரியனான தொல்காப்பியன்

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல் நூலாகும்

என்றான். வடமொழி வேதம் தெய்வங்களைப் பற்றிப் பேசும்.

வெண்ணூல் பூண்டோர் யாவரும் அந்தணர்களா? திருமூலன் நூலும் சிகையும் நுவலில் பிரமமோ என திருமந்திரம் செய்திருக்கின்றான். அதாவது பூணூலும் தலைமுடியும் பிராமணர் என்பதைக் காட்டாதாம். அந்தணர் யார் என்பதைத் திருவள்ளுவன்

“அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டு ஒழுகலான்

என்று மிக அழகாகச் சொல்லி இருக்கிறான்.

  பூணூல் அணிந்த ஆரியன் ஒருவன், இருக்கு வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தில் (112:3) “நான் பாடல்களைச் செய்கின்றேன், என் தந்தையோ ஒரு மருத்துவன், என் தாயோ திரிகையில் தானியங்களை அரைக்கின்றவள். செல்வத்தைப் பெறுவதற்காகப் பல்வேறு சூழ்ச்சிகளால் நாம் வேண்டிய தொழில்களை மேற்கொள்கிறோம் எனக்கூறியிருக்கிறான். இதன் கருத்து என்ன?

  நாரதா! அத்திப்பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தையாக இருப்பதைக் காணலாம். அவர்கள் உடம்பில் ஓடுவது திராவிடத் தமிழ் இரத்தமே அன்றி வேறில்லை. அந்தணர்கள் யாவரும் தெய்வச் சந்நிதியில் படைக்கும் அமுது கூடத் தமிழரின் அன்ன வகைகளே! சப்பாத்தியும், சமோசாவுமா படைக்கிறார்கள்? ஏன் பழங்களைப் படைக்கும் போது கூட கதலி பலம் நிவேதயாமி என்றுதானே சொல்கிறார்கள். கதலிப் பழம் என்றுகூடச் சொல்லத் தெரியாது ‘கதலி பலம்’ என்கிறார்கள். அதுகூடவா தமிழரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? கதலி வாழை எங்கே வளரும்? இந்த உலகையே வலம் வரும் நீ அறியாததா என்ன!

நாரதர்: இறைவா! அருச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன என்றும் அவர்களே முப்போதும் திருமேனி தீண்டுவார் எனவும் சேக்கிழார் சொன்னாராமே! தமிழ் அருச்சனை பற்றி திருமுறைகளில் பேச்சில்லையாமே!!

பார்வதி: நாரதா! பெரியபுராணத்தில் சேக்கிழான் மிக்க சொற்றமிழால் வேதமும் பாடினார்என்றும் எழுதுமறை மல்லல் நெடுந்தமிழால் இசைத்தார்எனவும் சொன்ன இடங்களில் வேதம், மறை என்ற சொற்களை தமிழ்வேதம், தமிழ்மறை என்றே அறுதியிட்டுப் பாடி இருப்பதைப்பார். எனவே அவர்களை பெரியபுராணத்தைக் கருத்தூன்றிப் படிக்கச் சொல்.

[இவர்கள் உரையாடல்களைச் செவிமடுத்த சிவன்]

சிவன்: தேவி! தமிழன் தன்னைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் தமிழ் மொழியில் உருவான பக்தி இலக்கியங்கள் போன்ற சொல்நயமும், கவிநயமும், கருத்தாழமும் உள்ள பக்தி இலக்கியங்கள் வேறு எந்த மொழியிலும் உருவாகவில்லை. அவற்றைப் பக்தி இலக்கியங்கள் என்பதைவிடத் தமிழர் வரலாற்றுக் கருவூலம் எனலாம். ஞானசம்பந்தன் பிறப்பைக் கூறும் போது சேக்கிழான் என்ன சொன்னான்?

திசையனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றேற

மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல

அசைவில்செழுந் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல

இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலைபெருக

 

பார்வதி: ஆகா! என்ன அருமையான பாடல். திருஞானசம்பந்தன் பிறந்ததால் உலகின் திசைகளைத் தென் திசை வெற்றி கொண்டு நிற்க. அதனால் வானுலகையும் மற்றைய உலகங்களையும் இப்பூவுலகம் தனித்து வெற்றிகொள்ள, பிறரால் அசைக்க முடியாத செந்தமிழ் அயல் [பக்கத்து] மொழியான ஆரியத்தை வென்றது.

நாரதர்: தாயே! திருஞானசம்பந்தன் பிறந்த நேரம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் போன்ற அயல் மொழிகள் தோன்றவுமில்லை, செந்தமிழுடன் போட்டியிடக்கூடிய நிலையில் இருக்கவுமில்லை. ஆரியமே தமிழுடன் போட்டியிட்டது என்று சேக்கிழான் சொன்னது உண்மையே.

முருகன்: தமிழ் அர்ச்சனை எது என்பதை சுந்தரன் வரலாற்றில் சேக்கிழான் குறிப்பிட்டானே!

[நாரதர் சிவனிடம் ஓடிச்சென்று, உரத்த குரலில்]

நாரதர்: பிரபோ! அந்தப் பாடலைப்பற்றி நான் கேட்டதாக அவர்கள் கேட்க, சேக்கிழானும் சுந்தரனின் பாடலின் சிறப்புக்காக என மழுப்பிவிட்டான். நீங்கள் சுந்தரனிடம் என்ன கேட்டீர்கள்?

சிவன்: சுந்தரனைப்பற்றி உங்களுக்குத் தெரியும். எப்பொழுதும் என்னுடன் வாதுக்கு நிற்பவன். நான் அவனை ஆட்கொண்டபோது செந்தமிழ்ப் பாட்டினால் அர்ச்சனை செய்யச் சொன்னேன். அதற்கு அவன்

செந்தமிழ்த் திறம் வல்லிரோ

………….. சொலும்

ஆரணிய விடங்கரே?”

என்று கேட்டான். நான் அதற்குச் சிரித்தேன்.

பார்வதி: [இடைபுகுந்து] உங்கள் சிரிப்பின் பொருள் உணர்ந்து, பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்! நீங்கள் இருப்பதைப் பாடினான்.

சிவன்: அதுமட்டுமா? பண்ணார் இன்தமிழாய் பரமாய பரஞ்சுடரே! எனவும், பக்தி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஏழிசையின் தமிழால் இசைந்தேத்திய பக்தியும் என்றும் ஏழாவது திருமுறையின் நூறாவது பதிகத்தில் பாடியிருக்கிறான்.

முருகன்: எந்தையே! நீங்கள் திருவீழிமிழலையில் அப்பருக்கும் சம்பந்தனுக்கும் படிக்காசு கொடுத்ததை, நீங்கள் தமிழோடு இசைகேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்என்றுகூடச் சுந்தரன் பாடியுள்ளானே!

சிவன்: முருகா! இன்றைய தமிழர்கள் பன்னிருதிருமுறைகளை நன்றாகப் படிக்கவில்லை. அதனால் வந்த குழப்பமே இது. ஞானசம்பந்தன் மூன்றாம் திருமுறையின் எண்பதாவது பதிகத்திலுள்ள நான்காவது பாடலில் என்ன சொல்லியிருக்கிறான் சொல் பார்க்கலாம்.

முருகன்:

செந்தமிழர் தெய்வமறை நாவர்

 செழுநற்கலை தெரிந்த அவரோடு

அந்தமில் குணத்தவர்கள் 

 அருச்சனைகள் செய்ய அமர்கின்ற அரனூர்

சிவன்: இதில் யார் அருச்சனை செய்கிறார்கள்? எந்த மொழியில் செய்கிறார்கள்? இதைவிடவா கூடிய ஆதாரம் வேண்டும்? செந்தமிழரின் தெய்வமறை தெரிந்த நாவையுடைய கலைவல்லவரோடு அந்தமில் குணத்தவர்கள் அருச்சனை செய்திருக்கிறார்கள். அந்தமில் குணத்தவர்கள் யார்? குணமென்னும் குன்றேறி நின்றவர்கள். அவர்கள் பிறப்பால் பிராமணர்களாக இருக்கத் தேவையில்லை. எவனிடம் அந்தணாளன் ஆகும் தன்மை இருக்கிறதோ அவன் அருச்சனை செய்யலாம். அந்தமில் குணமுடையவன் பிறப்பால் நந்தனாகவும் இருக்கலாம். யாராகவும் இருக்கலாம். சம்பந்தன் தமிழ்மொழியில் செய்த அருச்சனையைத் செந்தமிழர் தெய்வமறை என அழுத்திக் கூறியதோடு நற்குணங்கள் நிறைந்த அந்தமில் குணமுடையோரே அருச்சனை செய்தனர் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளான். அப்படியிருக்க எப்படி ‘தமிழ் அருச்சனைபற்றித் திருமுறைகளில் பேச்சில்லையாம்’ என்று கூறமுடியும்?

நாரதர்: அப்பனே! உம்முடன் சேர்த்துப், பன்னிருதிருமுறைகளையும் தமிழர் வீசிவிட வேண்டியதில்லை என்கிறீரா?

சிவன்: இன்றைய தமிழர் போல் அன்று நாவுக்கரசனும் தமிழையும் தமிழ்ப்பண்பாட்டையும் என்னையும் மறந்து பிறமொழி மோகத்தால் சமணமதத்தில் சேர்ந்து இருந்தான். அவன் தனது தவற்றை உணர்ந்த போது

வாயிருந்தும் தமிழே படித்து ஆளுறா ஆயிரஞ் சமணும் அழிவாக்கினான்

என ஐந்தாம் திருமுறையில் பாடி வருந்தினான். தமிழர்களை தமிழைப் படித்து திருமுறைகளைப் படிக்கச் சொல். அவர்களுக்கு உண்மை தானாகவே விளங்கும்.

  பார்வதி: ஞானசம்பந்தன் உங்களைக் காதலனாகவும் தன்னைக் காதலியாகவும் பாவித்துப் பாடிய திருக்கானூர்ப் பதிகத்தின் எட்டாவது பாடலில் நீங்கள், தமிழின் இனிமையான தன்மையைப் பேசி, தன்னைக் காதலித்து, தன் நிறத்தை எடுத்துக் கொண்டு, தனக்குக் குமிழம் பூ நிற மேனியைத் தந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினானே ஞாபகம் இருக்கிறதா?

நாரதர்: அம்மையே! என்ன சொன்னீர்கள்? இறைவனார் தமிழின் இனிய தன்மையைப்பற்றி ஞானசம்பந்தனிடம் பேசினாரா? அதைப் பாடிக்காட்டுங்களேன்.

 பார்வதி:

தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணி நல்ல

முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார்

குமிழின்மேனி தந்துகோல நீர்மையது கொண்டார்

கமழுஞ்சோலைக்  கானூர்மேய பவள வண்ணரே

நாரதர்: அபாரம்! அற்புதம்! இப்படியும் ஒரு பதிகத்தேவாரம் மாணிக்கப்புதையலாக திருமறைக்குள் மறைந்து கிடக்கிறதா? மகாதேவா! தாங்கள் தமிழ்மொழியில் திருஞானசம்பந்தனுடன் பேசினீர் என்று சொன்ன பிறகுமா தமிழருக்குத் தமிழ்மொழியில் அருச்சனை செய்யத் தடுமாற்றம்?

முருகன்: நாரதனே! ஞானசம்பந்தன் எந்தை பேசுவது தமிழ் என்று கூறினான். சுந்தரன் தந்தையின் ஊர் எது என்றும் கூறியிருக்கிறான்.

நாரதர்: [சிவனைப் பார்த்து] தங்களூர் எதுவோ?

சிவன்: நாரதா! சுந்தரன் தங்களூர் தமிழ்என்று சொன்னான். அது சரியே! இலிங்க வழிபாடும் தமிழருகுடையதே. ஆரியருக்குடையது உருத்திர வழிபாடு. இருக்கு வேதத்தில் சிவலிங்க வழிபாடு இகழப்பட்டுள்ளது. அதனை நீ அறிவாய்.

நாரதர்: சுந்தரன் தங்களூர் தமிழ் என்று பாடிய தேவாரத்தை நான் அறியலாமா?

சிவன்: 

திங்களூர் திருவாதிரையான் பட்டினமூர்

நங்களூர் நறையூர் நனிநாலிசை நாவலூர்

தங்களூர் தமிழான் என்று பாவிக்கவல்ல

எங்களூர் எய்தமான் இடையாறிடை மருதே

நாரதர்:தங்களூர் தமிழானென்று பாவிக்கவல்ல எங்களூர் எய்தமான்’ என்றால் என்ன?

முருகன்: அதாவது, தனது ஊர் [தங்களூர்] தமிழ் எனக் கருதும் [பாவிக்கும்], எங்களூர் வந்த பெருமான் எனச் சுந்தரன் சொன்னான். தமிழான் என்பது தமிழ் + ஆன் எனப் பிரியும். இதில் ஆன் விகுதி. இணுவில் + ஆன் = இணுவிலான், உடுவில் + ஆன் = உடுவிலான்கொக்குவில் + ஆன் = கொக்குவிலான் என்று சொல்வது போல தமிழ் ஊரில் வாழ்பவனைத் தமிழான் என்று தானே சொல்லவேண்டும்?

நாரதர்: தண்ணார் தண்ணளிக்கும் தண்பாண்டி நாட்டானே! தங்களூர் தமிழா? அப்போ ஏன் ஆரியன் கண்டாய் என்று சொல்கிறார்கள்?

முருகன்: நாரதா! இது என்ன கேள்வி? ஆரியத்தில் மட்டுமல்ல பிறமொழிகளிலும் கலைகளிலும் தமிழர் வல்லவர்களாக இருக்கிறார்களே! அது தவறா? தமிழர்களின் ஆற்றலுக்கு வெளிநாட்டார் தலைதாழ்த்தவில்லையா? சீவாத்மாக்களே பலமொழிகள் தெரிந்தவர்களாக இருக்கும் போது பரமாத்மாவிடம் இப்படிக் கேட்கலாமா?

[நந்தி அங்கு வந்து வணங்கி]

நந்தி: தென்னாடுடைய சிவனே போற்றி!

நாரதர்: எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

பார்வதி: நாரதா! இறைவன் யாருக்கு உரியவன் என்பதைப் புரிந்து கொண்டாயா?

நாரதர்: ஆம் தாயே! பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர்தமை நாணியே! என்பதைப் புரிந்து கொண்டேன் தாயே!

[நாரதர் சம்போ மகாதேவா! சம்போ மகாதேவா!!எனக்கூறியபடி கைலாசத்தைவிட்டுச் செல்கிறார்].

இனிதே,

தமிழரசி.

குறிப்பு:

அருச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன என்று திரு க உமாமகேசுவரன் அவர்களால் எழுதப்பட்டு 23 வது கலசம் இதழில் வெளிவந்த கட்டுரைக்கு மறுப்பாக கலசம் 25வது சிறப்பு மலரில் [தை 1999ல்] இதனை எழுதினேன். அவர் குறிப்பிட்ட பெரியபுராணத்திலும் திருமுறைகளிலும் இருந்து எனது கருத்துக்கான ஆதாரங்களைத் தந்துள்ளேன்.

தங்களூர் தமிழா? – பகுதி 2

முத்திரை - இதழ் : muthirai_ithazh